கிச்சன் கீர்த்தனா – கருப்பட்டி அல்வா

தமிழகம்

இன்றைய தீபாவளி பண்டிகையின்போது, என்னதான் ஸ்வீட் ஸ்டால்களில் விதவிதமான ஸ்வீட் கார வகைகளை வாங்கிச் சுவைத்தாலும் கூட, வீட்டில் செய்யப்படும் பட்சணங்களின் ருசியே தனி.

இந்த நிலையில், பாரம்பர்யமிக்க சுவையில் தீபாவளி தொடங்கி எந்நாளும் ருசிக்கும் வகையில் கருப்பட்டி அல்வா செய்து இந்த தீபாவளி திருநாளைக் கொண்டாடுவோம்.  ரத்தத்தைச் சுத்திரிகரித்து, உடலைச் சுறுசுறுப்பாக்குவதோடு, மேனி பளபளக்கவும் இந்தக் கருப்பட்டி அல்வா உதவும். 

என்ன தேவை?

கோதுமை மாவு – 200கிராம்
கருப்பட்டித்தூள் – 400கிராம்
நெய் – தேங்காய் எண்ணெய் கலவை – 150மில்லி
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
முந்திரி – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை மாவைச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கையில் கரைத்துப் பால் எடுக்கவும். கரைத்த சக்கையை மறுமுறையும் அரை டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்துப் பால் எடுத்து முதல் பாலுடன் சேர்த்து 2மணி நேரம் தெளியவிட்டு, தண்ணீரை வடித்துப் பாலை மட்டும் பிரித்தெடுக்கவும்.

பிறகு கருப்பட்டியை அரை கப் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் கருப்பட்டி நீரை ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

மாவில் இருந்து பிரித்த பாலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, பாகுடன் சேர்த்துக் கிளறவும். 5நிமிடங்களில் லேசாக கெட்டிப்படும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, சிறிது சிறிதாக நெய் – எண்ணெய் கலவை சேர்த்துக் கைவிடாமல் 45நிமிடங்கள் கிளற வேண்டியிருக்கும்.

இறுதியாக நெய் பிரிந்துவந்து அல்வா கெட்டியாகும் பக்குவத்தில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கினால் கமகம கருப்பட்டி அல்வா தயார்.

குறிப்பு:
சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால், ஒரு பங்கு மாவுக்கு மூன்று பங்கு தேவைப்படும். வெல்லம் சேர்த்தால் இரண்டு பங்கு போதுமானது. நெய் – தேங்காய் எண்ணெய் கலவைக்குப் பதிலாக முழுவதும் நெய் மட்டும் பயன்படுத்தியும் செய்யலாம்.

வயிறு முட்ட சாப்பிடுபவரா நீங்கள்?

கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *