செஸ் ஒலிம்பியாட் : மோடி படத்தை அகற்றிய தபெதிகவினர் கைது!

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பர பேனர்களில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் படங்களை அழித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மெகா நிகழ்வு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தம்பி’ (செஸ் ஒலிம்பியாடின் இலச்சினை உருவப்படம்) சிலையாகவும், சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்கப் பலகையைப் போலவே கருப்பு – வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசியது, இசை ஜாம்பவானான ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் அமைத்தது, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் என பல்வேறு இடங்களில் செல்பி ஸ்பாட், விளம்பர போஸ்டர், பேனர்கள் அரசின் விளம்பரம் மற்றும் செய்தி தொடர்பு துறை சார்பில் அமைக்கப்படுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லையென கூறி பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கரை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பாஜகவினர் ஒட்டி வந்தனர்.

தமிழக அரசின் சார்பில் வைக்கப்படும் விளம்பர படங்களில் அரசின் அனுமதி இல்லாமல் மோடி ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதனை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோட்டூர்புரம், மற்றும் வேறு சில பேருந்து நிறுத்தங்களில் மோடியின் படத்தை கருப்பு மையால் அழித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சசிகுமார், சாரதி, அரவிந்தன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

  • க.சீனிவாசன்
[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts