சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பொம்மைக் கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியதில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவை மீறி பொம்மைகளை விற்பனை செய்த அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இ-வர்த்தக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொது மக்களும் இதுகுறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள,
ரிட்ஸ் டிரேட் லிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட், கிட்ஸோனில் பிஎஸ்ஐ சட்டம், 2016ஐ மீறுவதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அமலாக்கச் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின்போது, இந்திய தர நிர்ணய அமைவன சட்டம் 2016 பிரிவு 28இன் படி,
கடைகளில் பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாமல் பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து பொம்மைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிஐஎஸ் தர விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை மீறி பொம்மைகளை விற்பனை செய்த,
அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற இ-வர்த்தக நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், நுகர்வோர் பாதுகாப்பு விதி 2019இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தர அமைப்பின் இயக்குநருக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
போலி மற்றும் கலப்பட பொம்மைகள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நீட்டித்துள்ளது.
மேலும் விதிகளை மீறும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் குறித்தும் நாடு முழுவதும் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
அத்துடன் பொதுமக்கள், எவரேனும் ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துவது தெரியவந்தால், பிஐஎஸ் தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், நான்காவது குறுக்கு சாலை, தரமணி, சென்னை-600 113 என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்கலாம்.
BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.
அத்தகைய தகவல்களின் ஆதாரம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.
BIS இணையதளம் www.bis.gov.in மற்றும் e-BIS (manakonline.in) ஆகியவை BIS பற்றிய பொதுவான தகவல்களுக்கு உங்களுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ராஜ்
ஆஸ்திரேலியாவிற்கு ஷாக் கொடுத்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்
கிச்சன் கீர்த்தனா : கோதுமை ரவை இனிப்பு பொங்கல்