ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. town panchayat changed municipality
கடந்த 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, ”ஸ்ரீபெரும்புதூரை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்” என்று அத்தொகுதியின் எம்.எல்.ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்தார்.
அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ”ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்” என்று தனது பதிலுரையில் அறிவித்தார். பின்னர் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டம், இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், மற்றும் தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்ட அறிவிப்பு வெளியானது.
மேலும், இந்த அறிவிப்பு குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெறப்பட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலனை செய்த தமிழக அரசு, தற்போது ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, தேர்தல் நடத்தப்படும் எனவும் தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.