பல் பிடுங்கிய விவகாரம்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!
அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 6 காவலர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்துவதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
இதனால் பல்வீர் சிங்கை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
மேலும் முழுமையான விசாரணை அறிக்கை வந்த பிறகு உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, 3 காவல் ஆய்வாளர்கள், 1 உதவி காவல் ஆய்வாளர், 2 காவலர்கள் என 6 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அம்பை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் ராஜகுமாரி, விக்கிரமசிங்கபுரம் ஆய்வாளர் பெருமாள், அம்பை உதவி ஆய்வாளர் சக்தி நடராஜன், காவலர்கள் மணிகண்டன் மற்றும் சந்தனகுமார் ஆகியோரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டி.ஐ.ஜி பரவேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து பல்வீர் சிங்கை விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
நிலக்கரி சுரங்க விவகாரம் : நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்
செலவைக் குறைக்க ஊழியர்களின் உணவில் கைவைத்த கூகுள்