தக்காளி மலிவாகக் கிடைக்கும் நேரமிது. தக்காளி சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இது உண்மையா?
“ஓரளவு உண்மையும் இருக்கிறது. எந்த உணவையும் எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பது முக்கியம். தக்காளி நல்லது என்ற எண்ணத்தில் அதை கிலோ கணக்கில் சாலடாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ சாப்பிடுவது சரியானதல்ல.
சாம்பார், ரசம் போன்றவற்றில் சேர்க்கும் ஒன்றிரண்டு தக்காளியால் பிரச்னை இல்லை. இது தக்காளிக்கு மட்டுமல்ல, கீரை, காலிஃபிளவர், புரொக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றுக்கும் பொருந்தும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும், “கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பாதிப்பை இன்று சிறிய குழந்தைகளிடம்கூட பார்க்கிறோம்.
ரொம்பவும் சிறிய குழந்தைகளுக்கு கிட்னி ஸ்டோன் வர மரபியல்ரீதியான காரணங்கள் இருக்கலாம். ரத்தம் தொடர்பான பிரச்னைகள் இருக்கலாம்.
பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை இருப்பதைப் பார்க்கிறோம்.
இந்தப் பிரச்னைக்கான பிரதான காரணம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததும், உப்பு சேர்த்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதும்தான். டீ, காபி அதிகம் குடிப்பது, ஃபாஸ்ட் ஃபுட் அதிகம் சாப்பிடுவது, நேரங்கெட்ட வேளைகளில் சாப்பிடுவது போன்றவையும் காரணமாகலாம்.
அடிக்கடி கழிவறைக்குச் செல்லத் தயங்கிக் கொண்டு தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்கிறார்கள் பலரும். இது மிகவும் தவறானது.
இவை தவிர, அளவுக்கதிமாக அசைவ உணவுகள் சாப்பிடுவது, நட்ஸ் அதிகம் சாப்பிடுவது, அளவுக்கதிமாக தக்காளி சாப்பிடுவது போன்ற வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
இந்தப் பிரச்னையோடு வருபவர்களுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் உணவுக்கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதில்லை. கிட்னி ஸ்டோன்ஸுக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஸ்கேன் எடுக்கப்படும்.
மறுபடி மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்னொரு ஸ்கேன் எடுக்கப்படும். அதில் கற்கள் உருவாகும் தன்மை அதிகமிருப்பது தெரியவந்தால் அவர்களது உணவுப்பழக்கத்தைக் கண்காணிக்கச் சொல்வோம்.
எப்படிப்பட்ட உணவிலும் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும் காரணியும் இருக்கலாம், அவற்றை எதிர்க்கும் தன்மையும் இருக்கலாம். எனவே ஆரோக்கியமாகவும் அளவாகவும் சாப்பிட மட்டுமே அறிவுறுத்துவோம்.
உதாரணத்துக்கு, கீரை எடுத்துக்கொள்பவர்களை தினமும் அதைச் சாப்பிட வேண்டாம் என்றும், வாரத்தில் ஒன்றிரண்டு நாள்கள் மட்டும் எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்துவோம்.
காலிஃபிளவர், முட்டைகோஸ், புரொக்கோலி போன்றவற்றை ஒரே நாளில் சேர்த்துச் சாப்பிட வேண்டாம் என்றும் சொல்வோம். தக்காளிக்கும் இதே விதி பொருந்தும். அளவோடு சாப்பிட்டால் எந்த உணவும் ஆபத்தாவதில்லை” என்கிறார்கள் சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர்கள்.
சென்னையில் ரூ.116 கோடியில் சிறுபாலங்கள், கால்வாய் : அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம்: இணைப்பு பாலம்!
டிஜிட்டல் திண்ணை: காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தந்த க்ளூ!