சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகள் உட்பட மொத்தம் 111 இடங்களில் ரூ.60க்கு நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று (ஜூலை 3) காலை ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “தக்காளி பற்றாக்குறையை சீரமைக்கும் முயற்சியாக சென்னை 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வடசென்னையில் 32, மத்திய சென்னையில் 25, தென் சென்னையில் 25 என்று நாளை முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.
அதேபோன்று 29 பண்ணை பசுமை கடைகள் உட்பட மொத்தம் 111 இடங்களில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும்.
அடுத்த 10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை. எனவே முதற்கட்டமாக நாளை சென்னையில் அறிவித்தபடி தக்காளி விற்கப்பட உள்ளது.
இந்த தக்காளி விலை உயர்வு குறித்து யாரையும் குறை சொல்ல முடியாது. நமது வியாபாரிகள் உரிய முறையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் தக்காளி விலை உயர்வு ஏற்படுகிறது.
எனினும் அடுத்தாண்டு இதுபோன்று தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’தமிழர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்’: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
கால்பந்து: சாம்பியன் கோப்பையுடன் முதல்வரை சந்தித்த வீராங்கனைகள்!