சென்னை, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக குறையாமல் உச்சத்திலேயே உள்ளது. அதற்கான காரணம் குறித்தும் இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை தான் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகிறது.
குறிப்பாக ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை உச்சத்தில் உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோ ரூ.70 வரை உயர்ந்தது, வெளிச்சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.100 வரை உயர்ந்து இருந்தது.
நேற்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது.
சைதாப்பேட்டை, அரும்பாக்கம், பெரம்பூர், திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில் முதல் தர தக்காளி ரூ.90 ஆகவும், சிறிய ரக தக்காளி கிலோ ரூ.70-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தக்காளி விலை உச்சத்திலேயே இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ள கோயம்பேடு சந்தை வியாபாரிகள், ”ஆந்திரா, கர்நாடக எல்லையோர மாநிலங்களில் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது.
ஆந்திரா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அந்தப் பகுதிகளில் குறைந்த அளவில் உற்பத்தியான தக்காளியும் சந்தைக்கு வரவில்லை.
இதனால், அந்தப் பகுதி வியாபாரிகளும் கர்நாடக, ஆந்திர எல்லையோர பகுதிகளில் தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை உச்சத்திலேயே உள்ளது.
இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை தான் நீடிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் இன்ஜினியரிங் கலந்தாய்வு வரை !
கிச்சன் கீர்த்தனா : சியா சீட்ஸ் டிரிங்க்
டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்கு தள்ளிப் போகும் துணை முதல்வர் பதவி… துரைமுருகன் காரணமா?