தக்காளி விலையேற்றம் தொடர்ந்து நீடிக்குமானால் நியாயவிலைக்கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் தக்காளி விலை ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் பண்ணை பசுமை அங்காடிகளில் தக்காளி கொள்முதல் விலையான ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள பசுமை அங்காடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “தக்காளி விலை ஏற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினோம். சென்னையில் 27 பண்ணை பசுமை காய்கறி அங்காடிகளில் தக்காளி கொள்முதல் விலையான ரூ.60-க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினோம்.
அதன்படி சென்னையில் உள்ள 27 பண்ணை பசுமை அங்காடிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 62 பண்ணை பசுமை அங்காடிகளில் தக்காளி விலை ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி விலை படிப்படியாக குறையும். வெளிச்சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது.
கோடை காலத்தில் மிகுந்த வெப்பத்தின் காரணாமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் பயிரிடுவதை விவசாயிகள் நிறுத்தியுள்ளனர். தக்காளி விலையேற்றம் வட மாநிலங்களிலும் உள்ளது. தக்காளி விலையேற்றம் தொடர்ந்து நீடிக்குமானால் நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
சிதம்பரம் நடராஜர் கோவில்: கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி!
தக்காளி திடீர் விலை உயர்வு: காரணம் இது தான்!