கோயம்பேடு மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வரத்து குறைவின் காரணமாக தக்காளி விலை அதிகரித்தது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல் டெல்லி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் தக்காளி விலை ரூ.100-ஐ எட்டியது. தக்காளி விளைச்சல் குறைவு மற்றும் ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மழை காரணமாக தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
தக்காளி விலை உயர்வு குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறும்போது, “தக்காளி என்பது எளிதில் அழுகிப்போகக்கூடிய காய்கறி. பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மழையால் தக்காளி போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது. தக்காளி விலை ஏற்றம் என்பது தற்காலிக பிரச்சனை. விரைவில் விலை குறையும்” என்று தெரிவித்தார்.
தக்காளி விலை அதிகரித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை அங்காடிகளில் ஒரு கிலோ தக்காளி கொள்முதல் விலையான ரூ.60-க்கு நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலையேற்றம் தொடர்ந்து நீடிக்குமானால் நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருந்தார்.
கோயம்பேடு சந்தைக்கு 1110 டன் தக்காளி தேவைப்பட்டும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 350 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. இன்று 700 டன் தக்காளி கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ளது.
இதன்காரணமாக கோயம்பேடு சந்தை மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
செல்வம்
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!