தக்காளி திடீர் விலை உயர்வு: காரணம் இது தான்!

தமிழகம்

நாடு முழுவதும் வெயில் சதமடித்து தற்போது ஓய்ந்துள்ள நிலையில் தக்காளி விலை சதமடிக்க துவங்கியுள்ளது. ஆம் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 -40 வரை விற்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களில் தக்காளி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 – 120 வரை விற்கப்படுகிறது. இதனால் பலரது வீடுகளில் தக்காளி சட்னிக்கு நோ சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2-ஆவது வாரம் வரை தக்காளி விலை குறைவாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. டெல்லியில் தக்காளி விலை ரூ.70 முதல் ரூ.100-க்கும் மத்திய பிரதேசத்தில் ரூ.80 -100, உத்தரப்பிரதேசத்தில் ரூ.80-100, ராஜஸ்தான் ரூ.90 -100, பஞ்சாப் ரூ.60-80க்கு விற்கப்படுகிறது. இந்த திடீர் விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் என்ன நிலை?

ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகளும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு ஒவ்வொரு நாளும் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் வருகின்றது.

tomato price hike reason

கடந்த வாரம் வரை தக்காளி கிலோ ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் தக்காளி மூன்று ரகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி முதல் ரக தக்காளி ரூ.100-க்கும் இரண்டாம் ரகம் ரூ.90-க்கும் மூன்றாம் ரகம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ நாட்டு தக்காளி சில்லறை விற்பனை கடைகளில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 800 டன் தக்காளி வரும். அண்மையில் தக்காளி விலை குறைந்ததால் விவசாயிகள் கடந்த 2 மாதங்களாக தக்காளி பயிரிடவில்லை. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தக்காளிக்கு வியாபாரிகள் மத்தியில் போட்டி உயர்ந்துள்ளது என்று கோயம்பேடு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோயம்பேடு சந்தைக்கு வரும் நாட்டு தக்காளி 15 கிலோ பெட்டி ரூ.800-க்கும் நவீன் தக்காளி ரூ.900-க்கும் வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது.

tomato price hike reason

இதே போன்று திருப்பூர், திருவண்ணாமலை, சேலம், மதுரை, நாமக்கல் என பல பகுதிகளிலும் தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தக்காளி விலை விஸ்வரூபம் எடுக்கவே அனைத்து பண்ணை பசுமை கடைகளிலும் தக்காளி கொள்முதல் விலையான ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும் தக்காளி விலை உயர்வை சாதகமாக பயன்படுத்தி பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என்ன?

கடந்த வாரம் கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த கன மழை காரணமாக தக்காளி பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தது.

இந்தியாவில் வெப்ப அலையால் ஏற்பட்ட உற்பத்தி பற்றாக்குறை விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் தாமதமான பருவமழையும் தக்காளி விலை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் தக்காளிக்கு போதுமான விலை கிடைக்காததால் பல விவசாயிகள் தக்காளி குறைவாக பயிரிடப்பட்டதும் விலை உயர்வுக்கு காரணம்.

அரசியல் விவாதமான தக்காளி

தக்காளி விலை உயர்வு குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “தக்காளி, வெங்காயம், உருளை மிக முக்கியமான உணவு பொருள்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் அவரது தவறான பொருளாதார கொள்கைகளால் கடந்த மாதம் விவசாயிகளால் சாலைகளில் தூக்கி எறியப்பட்ட தக்காளி விலை இப்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

tomato price hike reason

தக்காளி விலை உயர்வு குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறும்போது, “தக்காளி என்பது எளிதில் அழுகி போகக்கூடிய காய்கறி. பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மழையால் தக்காளி போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது. தக்காளி திடீர் விலை ஏற்றம் என்பது தற்காலிகமான பிரச்சனை. விரைவில் விலை குறையும். ஒவ்வொரு வருடமும் இந்த காலகட்டத்தில் தக்காளி விலை உயரும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பொது சிவில் சட்டம் அவசியம்: பிரதமர் மோடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *