வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று (ஜூலை 13) அதிகரித்துள்ளது.
அன்றாட உணவில் அத்தியாவசிய பொருளாக உள்ள தக்காளி தான் கடந்த சில தினங்களாகவே இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் குறைந்தபட்சம் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனையாகும் தக்காளி விலை சில தினங்களாகவே சதமடித்துள்ளது.
இதனால் பலரும் ஒன்று அல்லது அரை தக்காளி சேர்த்து சமையல் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் சிலர் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்றும் யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கும் சில்லறை விற்பனையில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் 1,100 டன் தக்காளி தேவைப்படும் நிலையில் கோயம்பேடு சந்தைக்கு 400 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது.
இதனால், வரத்து குறைவு காரணமாக நேற்றைய விலையில் இருந்து ஒரு கிலோ தக்காளி ரூ.20 அதிகரித்து மொத்த விற்பனையில் ரூ.130-க்கும் சில்லறை விற்பனையில் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை புறநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி இருப்பை பொறுத்து ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நியாய விலை கடைகள், பண்ணை பசுமை அங்காடிகள், நடமாடும் வாகனங்கள் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 விற்பனை செய்யப்படுகிறது.
ஆனாலும் இதனால் முழு தீர்வு கிடைக்கவில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தக்காளி விலை மட்டுமல்லாது, இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
மோனிஷா
மீண்டும் சாம்பியன் ஆன கோவை கிங்ஸ்!: வெற்றி ரகசியம் சொன்ன ஷாருக்கான்
தெற்கு ரயில்வே: 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி!