சென்னை கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி மொத்த விற்பனையில் கிலோவிற்கு ரூ.30 அதிகரித்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 மாதங்களாகவே தக்காளி விலை தான் இல்லத்தரசிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் நாடு முழுவதுமே தக்காளி விலை சதமடித்திருந்தது.
காரணம் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளியை பயிரிடாமல் இருந்ததும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையும் தான்.
இதனிடையே சந்தையில் தக்காளி வரத்துக்கு ஏற்ப தினசரி விலை மாற்றமும் இருந்து வந்தது. இதனால் ஒரு தக்காளி அல்லது அரை தக்காளி சேர்த்துச் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.30 அதிகரித்து ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் நேற்று ரூ.130-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1,100 டன் தக்காளி வரத்து தேவைப்படும் நிலையில் இன்று 400 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதால் தான் இந்த அதிரடி விலையேற்றம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தமிழக அரசு நியாய விலை கடைகள், பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
மத்திய அமைச்சருக்கு ஆபாச வீடியோ கால் : இருவர் கைது!
சென்னை வில்லிவாக்கம் ஏரியை விரைவில் திறக்க திட்டம்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!