பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.68க்கு ஒரு கிலோ தக்காளி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தக்காளி விலை பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. வெளி மாநிலங்களில் கனமழை, தமிழ்நாட்டில் வெப்பம் ஆகிய காரணங்களால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதன் காரணமாக சென்னையில் தக்காளி விலை ரூ.100 ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பன் இன்று (ஜூன் 27) தக்காளி விலை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800டன் வரையிலான வரக்கூடிய தக்காளி வரத்து 300டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்,
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், திருச்சியில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 1 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை, மதுரையில் செயல்பட்டு வரும் 4 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்.
மேலும், தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வீதம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பீடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவானதாகும். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த விலையேற்றம் தற்காலிகமானதே விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் இடமாற்றம்!
தந்தை குறித்து சிவகார்த்திகேயனின் நெகிழ்ச்சி பதிவு !