உணவில் தவிர்க்க முடியாத காய்கறியாக இருக்கும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெட்ரோல் விலைக்கு போட்டியாக உயர்ந்து வருகிறது தக்காளி விலை. சென்னை, டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, மும்பை, திருவனந்தபுரம், பாட்னா, ராய்ப்பூர் என நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தக்காளி விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டின் இன்றைய (ஜூலை 13) காய்கறி விலை நிலவரப்படி, தக்காளியின் மொத்த விலையே ரூ.120ஆக உள்ளது. சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்கப்படுகிறது.
குடைமிளகாய் ரூ.180, பீன்ஸ் ரூ.100, இஞ்சி ரூ.260, பச்சை பட்டாணி ரூ.200, பூண்டு ரூ.200 என உணவுக்கு தேவையான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பது சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
தாக்காளி வாங்குவது நிறுத்தம்!
இந்தசூழலில் 7 சதவிகித இந்திய மக்கள் தக்காளி வாங்குவதை நிறுத்தியுள்ளதாக லோக்கல் சர்க்குள்ஸ் என்ற ஆய்வு தளம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக லோக்கல் சர்க்குள்ஸ் நாடு முழுவதும் 311 மாவட்டங்களில் 21,000 பேரிடம் ஆய்வு நடத்தியிருக்கிறது.
இந்த 21,000 பேரில் 75 சதவிகிதம் பேர் தக்காளி பயன்பாட்டை குறைத்துள்ளதாக கூறியுள்ளனர். அதுபோன்று 67 சதவிகிதம் பேர் தக்காளி கிலோவுக்கு ரூ.80க்கு மேல் செலவிடுவதாகவும், 32 சதவிகிதம் பேர் நுகர்வோர் கிலோ ஒன்றுக்கு ரூ.100-150 வரை செலுத்துவதாகவும், 6 சதவீதம் பேர் தக்காளிக்கு ரூ.150க்கு மேல் செலுத்துவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. குறிப்பாக 7 சதவிகிதம் பேர் தக்காளி வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாகவும், இந்த ஆய்வு கூறுகிறது.
மறுபக்கம், உணவு நிறுவனங்களும் தாக்காளி பயன்பாட்டை குறைத்து வருகிறது. இல்லையெனில் தக்காளி உள்ளிட்ட உணவுக்கு தேவையான பொருட்களின் விலை உயர்வால் சிறிய ஹோட்டல்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை சாப்பாட்டின் விலை உயர தொடங்கியிருக்கிறது.
இதுகுறித்து சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான நம்ம வீடு வசந்த பவன் ரவி மின்னம்பலத்திடம் கூறுகையில், “விலைவாசி உயர்வால் சின்னச் சின்ன ஹோட்டல் காரர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் விலையை ஏற்றியிருப்பார்கள். பெரிய ஹோட்டல்களில் விலை ஏற்றுவது தொடர்பான ஆலோசனையில்தான் இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் மெக்டொனால்டு போன்ற சர்வதேச உணவு நிறுவனங்கள் இந்தியாவில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருக்கும் கடைகளில் தக்காளி பயன்பாட்டை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து மெக்டொனால்டு தரப்பில், “போதுமான அளவு தக்காளியை எங்களால் பெற முடியவில்லை. எனவே, தற்போதைக்கு தக்காளி இல்லாத உணவுகளை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று கூறியுள்ளது.
கணவன் மனைவி இடையே சண்டை!
ஹோட்டல்கள் நிலவரங்கள் இப்படி என்றால் குடும்பங்களின் நிலை இன்னும் கொடுமையாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வீட்டை வீட்டு மனைவி வெளியேறும் அளவுக்கு இந்த தக்காளி விலை வேலை பார்த்திருக்கிறது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவியான சஞ்சீவ் பர்மன், ஆர்த்தி பர்மன் இருவரும் டிபன் செண்டர் ஒன்று நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமையல் செய்யும் போது தனது மனைவியிடம் கேட்காமல் சஞ்சீவ் பர்மன் இரண்டு தக்காளியை சாம்பாரில் சேர்த்துள்ளார். என்னை கேட்காமல் சாம்பாரில் எப்படி தக்காளியை சேர்க்கலாம் என மனைவி கேள்வி எழுப்ப, இதனால் கணவன் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையாக மாறியது.
இறுதியாக தனது குழந்தையுடன் ஆர்த்தி பர்மன் வீட்டை வீட்டு கணவருக்கு தெரியாமல் சென்றுவிட்டார். 3 நாட்களாக தேடியும் தனது மனைவி கிடைக்காததால் உள்ளூர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரைத் தொடர்ந்து சஞ்சீவின் மனைவி தூரத்து சொந்தக்காரர் வீட்டில் இருப்பது தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் பேச வைத்துள்ளனர். சஞ்சீவின் மனைவி ஆர்த்தி விரைவில் வீடு திரும்புவார் என்று போலீஸ் அதிகாரி சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
தக்காளியால் கொலையா?
மத்திய பிரதேசத்தில் இப்படி என்றால் ஆந்திர பிரதேசத்தில் தக்காளி விற்ற பணத்தை கொள்ளையடிப்பதற்காக ஒரு விவசாயியை மர்ம கும்பல் கொலைசெய்ததாக கூறப்படுகிறது.
மதனப்பள்ளி மண்டலத்தின் போடிமல்லடின்னே பகுதியைச் சேர்ந்தவர் நரேம் ராஜசேகர் ரெட்டி (62). தக்காளி விவசாயி. விலை உயர்வு காரணமாக, தனது நிலத்தில் தக்காளி நல்ல விளைச்சல் காரணமாகவும் கடந்த ஒரு மாதத்துக்குள் ரூ. 30 லட்சம் வரை ராஜசேகர் ரெட்டி சம்பாதித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஜூலை 12ஆம் தேதி இரவு, ஊருக்குள் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள், ராஜசேகர் ரெட்டியின் கை கால்களை கட்டி மூக்கில் துண்டு வைத்து மூச்சை அடைத்து கொலை செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் ராஜசேகர் மனைவி போலீசாரிடம், “அடையாளம் தெரியாத சிலர் தங்களது பண்ணைக்கு தக்காளி கேட்டு வந்ததாகவும், அப்போது கணவர் வீட்டில் இல்லை ஊருக்குள் சென்றிருக்கிறார் என கூறி அனுப்பினேன்” எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் மதனப்பள்ளி போலீசார், தக்காளி விற்ற பணத்தை கொள்ளையடிக்க இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனினும் இதை உறுதிப்பட கூற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சூழலில் தக்காளி வியாபாரிகளும், விவசாயிகளும் தக்காளிக்கு பலத்த பாதுகாப்பு போட்டு வருகின்றனர்.
கோவை குசும்பு!
தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில், இளைஞர்களும், விவசாயிகளும் வினோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள மண்டபம் ஒன்றில் கணேஷ் – ஹேமா தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிசாமி மற்றும் விவசாயிகள் தம்பதிகளுக்கு தக்காளியை அன்பளிப்பாக அளித்தனர்.
அதேபோல் மணமகனின் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை பரிசளித்து மகிழ்ந்தனர்.
இன்னொரு பக்கம் தக்காளியை வைத்து நெட்டிசன்கள் மீம் மற்றும் வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நட்சத்திர ஜன்னலில் தக்காளி டா 🤣🤣🤣 #ராட்ஷசன் pic.twitter.com/WH9CoaJKDN
— ❤️அன்பின் கனவு™❤️ (@kanavukadhalan) July 13, 2023
அவற்றில் சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை எல்லா நம்மால் வெறும் நகைச்சுவையாகவோ, அதிர்ச்சியடைவதாலோ மட்டும் கடந்து செல்ல முடியாது. இந்த விலை உயர்வு என்பது உணவகங்கள், உணவு உற்பத்தியாளர்கள், சாமனிய மக்கள், தக்காளி வெங்காயத்தை சார்ந்திருக்கக் கூடிய நிறுவனங்கள் என பலரையும் பாதித்துள்ளது.
எனவே விரைவில் தக்காளி விலையை குறைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிரியா
‘காவாலா’ பாடலில் நயன்தாரா, சிம்ரன்
மன்னிப்பு கேட்ட குருமூர்த்தி: வழக்கிலிருந்து விடுவிப்பு!