மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வார காலமாகவே படிப்படியாக விலை உயர்ந்து சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 2வது நாளாக ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் கோடை வெயில் பல இடங்களில் சதமடித்த நிலையில் வட மாநிலங்களில் தற்பொது கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா பகுதியிலும் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் தினசரி 50 முதல் 60 லாரிகளில் சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு தக்காளி விற்பனைக்கு வரும் நிலையில் தற்போது 30 லாரிகளில் மட்டும் வருகிறது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 1,200 டன் தக்காளி தேவைப்படும் நிலையில் 350 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 மற்றும் இதை விட அதிகமாகவும் விற்பனையாகிறது. தக்காளி மட்டுமின்றி இஞ்சி, பச்சை மிளகாய், அவரை, பீன்ஸ் உள்ளிட்ட மற்ற வகையான காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
பெங்களூருவிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உணவில் அத்தியாவசிய பொருளாக சேர்க்கப்படும் தக்காளியின் விலை உயர்வு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா