தமிழகத்தில் அதிக விலைக்குத் தக்காளி விற்கப்படுவதால் தமிழக அரசு, பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைக்குத் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
சென்னைக்குத் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள் தினசரி வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் அண்டை மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாகக் காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை விரைவாக ஏற்றத்தைக் கண்டது.
குறிப்பாகத் தக்காளி இருமடங்கு விலை உயர்ந்து ரூ. 60க்கு விற்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வரத்து குறைந்தால் தக்காளி விலை மேலும் உயரும் என்று கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியிருந்தார்.
இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து காய்கறி வாங்குவது குறித்து கவலை கொண்டுள்ளனர்.
இந்த விலை ஏற்றம் மக்களை பாதிக்காமல் இருப்பதற்காகத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாகத் தக்காளி கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு வேளாண் துறை சார்பில் இன்று (செப்டம்பர் 6) உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 40 முதல் ரூ. 42 வரை விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை விலையேற்றம் பாதிக்காமல் இருக்கும் வகையில் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்தி தக்காளி விற்பனையைத் தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் பண்ணை பசுமை கடைகளில் ஓரிரு நாட்களில் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
தக்காளி விலை உயர்வை குறைக்க நடவடிக்கை