வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் டோல்கேட் அமைக்கப்பட்டு புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை மக்கள் அடித்து நொறுக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Toll plaza Smashed near Batlagundu
சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதன் பிரதான காரணம், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரிப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவுமான செலவுகளைச் சமாளிப்பதற்காகவே ஆகும். மேலும், புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதற்கும், போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காகவும், கட்டண வசூல் மூலம் கிடைக்கும் பணம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச் சாலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை நான்குவழிச் சாலைக்காக திட்டம் தொடங்கப்பட உள்ளது. Toll plaza Smashed near Batlagundu
இந்த நிலையில் இந்த இருவழிச் சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. நான்குவழிச் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் டோல்கேட் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஆனால், நேற்று (மார்ச் 12) டோல்கேட்டை திறப்பதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். இதையறிந்த அந்தப் பகுதி மக்கள் திடீரென டோல்கேட் பகுதியில் ஒன்று திரண்டு கற்கள், கம்புகளை கொண்டு அடித்து நொறுக்கினர்.
இதில் டோல்கேட் கண்ணாடி கூண்டுகள், கணினிகள், போன்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. மேலும் டோல்கேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் விவசாயிகள் பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் வத்தலகுண்டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பரபரப்பாக காணப்பட்டது.
நிகழ்விடத்திற்கு வந்த நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி, பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தற்போது சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாமல் நொறுக்கப்பட்ட புதிய சுங்கச்சாவடி காட்சியளிக்கிறது.