தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளின் கட்டண முறையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியிருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் இதுகுறித்து இன்று (ஆகஸ்டு 25) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 29,666 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன.
இந்த சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன.
இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 என இரண்டு கட்டங்களாக சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ள வேல்முருகன் தொடர்ந்து,

“பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட இருப்பது பொதுமக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் இந்த ஒன்றிய அரசு, தற்போது சுங்க கட்டணத்தை மேலும் உயர்த்த இருப்பது கண்டனத்துக்குரியது.
தற்போதைய சுங்கக் கட்டண உயர்வால் ஏற்கனவே நிதி நெருக் கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்கும், கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
சுங்கக் கட்டண உயர்வால் மறைமுகமாகச் சரக்கு வாகனங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.
இது ஒருபுறமிருக்க, சுங்கச்சாவடி என்பதே பகற்கொள்ளை தான். ஒப்பந்த நிறுவனங்கள் போட்ட பணத்தை சில ஆண்டுகளிலே இலாபத்துடன் திரும்ப எடுத்துவிட்ட பிறகும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டண வசூலுக்கான அனுமதி வழங்கப்பட்டுவருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தும் முடிவை ஒன்றிய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் அன்றாடம் வசூலிக்கப்படும் உபயோகிப்பாளர் வாகனக் கட்டண விபரம், சுங்கச் சாவடிகளில் தினசரி கடந்து செல்லும் மொத்த வாகன விபரங்கள் மற்றும் சாலை மற்றும் சுங்கச் சாவடிகளை பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விபரங்களை,
பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஒன்றிய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார் வேல்முருகன்.
கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்வு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
-வேந்தன்