சுங்க வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இன்று (ஏப்ரல் 1) தமிழகம் முழுவதும் அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் முற்றுகையிட்டு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 5 முதல் 10 சதவிகிதம் வரை வாகனங்களுக்கு ஏற்றாற்போல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கருப்பூர் சுங்கச்சாவடியில் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் தன்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணத்தை ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து உயர்த்தியுள்ளது. இதற்கு கண்டனத்தை தெரிவிக்கத்தான் இன்று (ஏப்ரல் 1) ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
தமிழகத்தில் இருக்கும் அத்தனை சங்கங்களும் அந்தந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன.
சுங்கக் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று தபால் மூலமாகவும், நேரடியாகவும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை.
5 சதவிகிதம், 10 சதவிகித உயர்வு தானே என சாதாரணமாக கூறலாம். ஆனால் சேலத்தில் இருந்து டெல்லிக்கு சென்று வந்தால் சுங்கவரி ரூ.4,000 – ரூ.5,000ஆகும். இதுபோன்று அசாம், கேரளா என எங்கு சென்று வந்தாலும் கட்டணம் அதிகமாக இருக்கிறது.
இந்த கட்டண முறையை மாற்றி ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் கொண்டு வரவேண்டும்.
அதுபோன்று ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்றொரு சுங்கச்சாவடிக்கும் 60கிமீ இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடியை நீக்கிவிடுவோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்னார்.
தமிழக அமைச்சர் எ.வ.வேலு டெல்லி சென்று 60கிமீ இடைவெளிக்குள் இருக்கும் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுவரைக்கும் எந்தவிதமான முடிவும் மத்திய அரசு எடுக்கவில்லை. தற்போது ஜிபிஆர்எஸ் கருவி மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
அந்த ஜிபிஆர்எஸ் முறை தற்போது இருக்கும் சுங்கச்சாவடி முறையை விட கொடுமையானது. ஏனென்றால் சுங்கசாவடிகள் உள்ள சாலைக்கு வாகனம் சென்றாலே ஆன்லைனில் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும் என்கிறார்கள்.
இதுவரை சுங்கக் கட்டணம் ஒரு வருட வசூலானது 36 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் ஜிபிஆர்எஸ் மூலம் வசூலிக்கப்பட்டால் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆண்டுக்கு வசூலாகும் என கட்கரி பெருமையாக சொல்கிறார்.
அவருக்கு வேண்டுமானால் அது பெருமையாக இருக்கலாம், ஆனால் லாரி தொழிலே ஒன்றுமில்லாமல் போய்விடும். அதனால், ஜிபிஆர்எஸ் முறையை அமல்படுத்தக்கூடாது” என்று கூறினார்.
பிரியா
விஜய் சேதுபதி நடிக்கும் புது வெப் சீரிஸ்!
இந்தியாவிற்கே வழிகாட்டியது வைக்கம் போராட்டம்: முதல்வர் ஸ்டாலின்