தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நேற்று (நவம்பர் 27) நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 3,271 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கும் (ஆயுதப்படை-2,180, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை-1091), 161 இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணியிடங்களுக்கும், 120 தீயணைப்பாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 3,552 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பைத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வெளியிட்டது.
தேர்வு எழுதத் தேர்வர்கள், ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15 வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர்.
தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்குக் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி ஹால் டிக்கெட், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
காவலர் தேர்வில் முதல் கட்டமாக, எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 295 மையங்களில் நேற்று காலை (நவம்பர் 27) 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உள்ள 295 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் 3.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2.99,887 பேர் ஆண்கள், 66,811 பேர் பெண்கள், 59 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
இந்த நிலையில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
மோனிஷா