மனை, கட்டட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை எளிதாக பதிவு செய்யும் வகையில், அதற்கான இ-சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், அதற்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
‘தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,
மனை மற்றும் கட்டட மேம்பாட்டாளர்கள் தங்கள் திட்டங்களை பதிவு செய்யவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் இ-சேவை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சிறப்பு உதவிக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனைப்பிரிவை பொறுத்தவரை 20,000 சதுர மீட்டர் அதாவது இரண்டு ஹெக்டேர் வரை ஒரு திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம், இரண்டு ஹெக்டேருக்கு அதிகமாக இருந்தால் ரூ.10 ஆயிரமும் செலுத்த வேண்டும்.
கட்டடங்களைப் பொறுத்தவரை 20 வீடுகள் வரை திட்டத்துக்கு ரூ.10 ஆயிரமும், 21 முதல் 50 வீடுகள் வரை ரூ.15 ஆயிரம், 51 முதல் 100 வீடுகள் வரை ரூ.10 ஆயிரம், 100 வீடுகளுக்கு மேல் உள்ள குடியிருப்பு என்றால் ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
வர்த்தக கட்டடங்களாக இருந்தால், தரைப்பகுதியில் 1000 சதுர மீட்டர் வரை திட்டம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம், 1001 முதல் 5,000 சதுர மீட்டர் என்றால் ரூ.15 ஆயிரம்,
5,001 முதல் 10,000 வரை ரூ.20 ஆயிரம், 10,000 சதுர மீட்டருக்கு மேல் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். திட்டம் கலவையாக இருந்தால் அவற்றுக்குரிய கட்டணங்கள் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை, ஆன்லைன் மூலமோ அல்லது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்தில் உள்ள விற்பனை முனைய இயந்திரம் மூலமோ செலுத்தலாம்.
இந்த வசதியானது ஏற்கெனவே ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு மட்டுமே. விண்ணப்பங்களுடன் ஆவணங்களை நகல்களாக வழங்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: எடைக்குறைப்பு உதவுமா எலுமிச்சை சாறும் தேனும் கலந்த வெந்நீர்?
அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1
டாப் 10 நியூஸ்: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல் கோட் டிரெய்லர் அப்டேட் வரை!