குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று(மார்ச் 9) அறிவித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜுலை 24ம் தேதி குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வினை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. 7,301 காலிப் பணியிடங்களுக்கான இத்தேர்விற்கு 22,02,942 பேர் விண்ணப்பித்த நிலையில் சுமார் 18 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.
எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்த நிலையிலும், தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் டிஎன்பிஎஸ்சி மெத்தனம் காட்டி வருவதாகவும், தேர்வாணையம் படுதோல்வி அடைந்து விட்டதாகவும் எதிர்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனை சமாளிக்கும் விதமாக இம்முறை குரூப் 4 விடைத்தாள்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
சுமார் 36 லட்சத்திற்கும் கூடுதலான வினாத்தாட்கள் ஸ்கேன் செய்யப்படுவதால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் கடந்த மாதம் 14ம் தேதி விளக்கம் அளித்தது.
இதற்கிடையே உடனடியாக குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி தேர்வர்கள் சமூக வலைதளமான ட்விட்டரில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கை கடந்த சில நாட்களாக ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் ஐஏஎஸ் வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சூரியின் செயலால் டென்சனான இளையராஜா
IND VS AUS 3 வது ஒருநாள் போட்டி: சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விலை இதோ!