மதியம் நடக்கவிருக்கும் குரூப் 2 மற்றும் 2ஏ பொதுத்தேர்வு தாமதமாகத் தொடங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 186 மையங்களில் இன்று (பிப்ரவரி 25) டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வு காலை தொடங்கியது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 57,641 பேர் இன்று நடைபெறும் முதன்மை தேர்வை எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 8,315 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சில தேர்வு மையங்களில் காலை 9.30 மணிக்குத் தொடங்க வேண்டிய தமிழ் மொழித் தகுதித்தாள் 10 மணிக்கு மேல் தாமதமாகத் தொடங்கப்பட்டது. தேர்வர்களின் பதிவெண் வரிசை, வினாத்தாள் பதிவெண் வரிசையில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாகத் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.
இதனால் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் எவ்வளவு நேரம் தாமதமாகத் தேர்வு தொடங்கப்பட்டதோ அவ்வளவு நேரம் தேர்வு எழுத கூடுதலாக வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
அதன்படி தேர்வுகள் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், காலை தேர்விற்குப் பிறகு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், காலையில் தேர்வு தாமதமாகத் தொடங்கப்பட்டதால் மதியம் தேர்வு 30 நிமிடங்கள் தாமதமாக 2.30 மணிக்குத் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பைத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ளார்.
2.30 மணிக்குத் தொடங்கப்படும் தேர்வு மாலை 5.30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் வசதிக்காகவும், காலையில் ஏற்பட்ட குழப்பம் மதியம் ஏற்படாமல் இருக்கவும் டிஎன்பிஎஸ்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மோனிஷா
ஸ்டாலினை டென்ஷன் ஆக்கிய சீமான்
தாங்க முடியாத சோகம்: தாயின் கால்களைப் பிடித்து அழுத ஓபிஎஸ்