டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு தேர்வர்கள் தங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தமிழகத்தில் நாளை (நவம்பர் 19) டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தங்களைத் தயார்படுத்திக் கொண்டு தேர்வை எழுதுவதற்குத் தயாராக இருப்பார்கள்.
என்னதான் தேர்விற்குப் படித்து முடித்து தயாராக இருந்தாலும், நாளை காலை சரியான நேரத்திற்குத் தேர்வு மையத்திற்குச் செல்வது முதல் தேர்வை முடித்து விட்டு வெளியேறும் வரை சில விஷயங்களையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.
அதற்கான முன்னேற்பாடுகள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்கவிருக்கும் தேர்வு 12.30 மணிக்கு நிறைவுபெறும். தேர்வர்கள் தேர்வு நடைபெறும் வளாகத்திற்குள் காலை 8:30 மணிக்குள் சென்று விட வேண்டும்.
ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு நகலைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஓஎம்ஆர் தாளில் 2 இடங்களில் தேர்வு எழுதுவதற்கு முன், தேர்வு முடிந்த பிறகு எனக் கையெழுத்தையும் தேர்வு முடிந்த பிறகு ஓரிடத்தில் இடது கை பெருவிரல் ரேகையும் வைக்க வேண்டும். தேர்வு அறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் படி செயல்பட வேண்டும்.
(பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலைச் சுத்தமாகத் துடைத்த பின்னர் ஓஎம்ஆர்-ஐ கையாளவும்)
வினாத்தாள் கையேடு (Question paper Booklet) எண்ணினைப் பிழையின்றி சரியாக எழுதி உரிய வட்டங்களில் பேனாவால் எண்களை ஷேட் (shade) செய்ய வேண்டும்.
எந்தவொரு வினாவிற்கும், எக்காரணம் கொண்டும் ஷேட் செய்யாமல் விடாதீர்கள். 200 வினாக்களையும் கட்டாயம் ஷேட் செய்து விடுங்கள். ஷேட் செய்வதற்கு முன் வினா எண்ணினையும், ஆப்ஷன்களையும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு கவனமாக ஷேட் செய்யவும்.
ஏ, பி, சி, டி என ஒவ்வொரு ஆப்ஷனையும் எத்தனை ஷேட் செய்திருக்கிறீர்கள் என்பதை மிகச் சரியாக எண்ணி எழுதவும், எண்ணிக்கையினை ஷேட் செய்யவும் வேண்டும்.
இதற்கு 12:30 – 12:45 வரை 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும். ஷேட் செய்த பிறகு எண்ணிப் பார்த்துக் கூடுதல் சரியாக 200 வருகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை தனியே எழுதி சரிபார்த்துக் கொண்டு ஓஎம்ஆர்-ஐப் பூர்த்தி செய்யவும்.
ஷேட் செய்வதற்குக் கண்டிப்பாகக் கருப்பு நிற பந்து முனை பேனாவினை (Black Ball point Pen) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஹால் டிக்கெட்டில் உங்களின் புகைப்படம், கையெழுத்து இடம் பெறவில்லை, சரியாகத் தெரியவில்லை அல்லது தவறாக உள்ளது என்றால், ஒரு வெள்ளைத்தாளில் உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தினை ஒட்டி உங்களின் பெயர், முகவரி, பதிவு எண், கையொப்பம், ஹால் டிக்கெட்டின் நகல் மற்றும் மேற்கூறிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலுடன் தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவை அனைத்திற்கும் முன்பாக காலை உணவைத் தவறாமல் எடுத்துக் கொண்டு தேர்வு எழுதச் செல்லவும். நன்றாகத் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: அரசின் நியமனங்கள்- திமுக நிர்வாகிகள் குமுறல்!
தரமற்ற உணவு: அம்மா உணவகத்துக்கு மாநகராட்சி நோட்டீஸ்!