தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த டிஎன்பிஎஸ்சி 2024 வருடாந்திர தேர்வு கால அட்டவணை இன்று(டிசம்பர் 20) வெளியாகியுள்ளது. TNPSC Exam annual Time Table 2024 Released
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு நடத்தப்பட்டு நியமனம் செய்யப்படுகிறார்கள்.
இந்த தேர்வுகளுக்கான வருடாந்திர அட்டவணை டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அதில், என்னென்ன போட்டித்தேர்வுகள், காலிப்பணியிடங்கள், எழுத்துத்தேர்வு எப்போது நடத்தப்படும்? உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.
இந்த கால அட்டவணை வெளியிடுவது, அரசு பணியில் சேரவிரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக பெரிதும் உதவியாக இருக்கும்.
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
ஆனால் 15ஆம் தேதி கடந்தும் தேர்வு கால அட்டவணை குறித்து எந்தவித தகவலும் வராத நிலையில், சமூகவலைதளங்களில் அதனை விரைந்து வெளியிடக்கோரி தேர்வர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் டிசம்பர் முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இன்று வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் குரூப் 4 தேர்வு!
மொத்தம் 19 தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த குரூப் 4 தேர்வு குறித்து ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. எனினும் தேவைப்படும் காலி பணியிடங்கள் குறித்து குறிப்பிடப்படவில்லை.
குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு!
குரூப் 1 தேர்வுக்கு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் 65 பணி இடங்களுக்காக தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 1,294 காலி இடங்களுக்கு குரூப் 2, 2ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகி, எழுத்துத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளன.
முதன்முறையாக ஃபாரஸ்ட் கார்டு தேர்வு!
அதே போல முதன்முறையாக தமிழ்நாடு வனத் துறை சார்பில் ஃபாரஸ்ட் கார்டு மற்றும் ஃபாரஸ்ட் வாட்ச்சர் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக 1264 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு அறிவிப்பு 2024 மார்ச் மாதம் வெளியாகி, ஜூன் மாதத்தில் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
இதுமட்டுமின்றி நீதிபதிகள், வனத் துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த பொறியியல் துறை சேவை, உடற்கல்வி, நூலக அலுவலர்கள், தொல்லியல் துறை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நெல்லை, தூத்துக்குடி ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஸ்டாலின் ட்வீட் டெலிட்… தேவிபாரதிக்கு கன்பார்ம் ஆன சாகித்ய அகாடமி!
TNPSC Exam annual Time Table 2024 Released