தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. குரூப் 4, குரூப் 2, குரூப் 1 மற்றும் தொழில்நுட்பத் தேர்வுகள் எனப் பல்வேறு தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.
இவற்றில் பெரும்பாலான தேர்வுகள் ஓ.எம்.ஆர் (OMR) தாள் அடிப்படையில் வினாக்கள் அடங்கிய தேர்வாக நடைபெறும். இந்த நிலையில், தேர்வாணையம் தேர்வர்களுக்கான, ஓ.எம்.ஆர் (OMR ஆப்டிகல் மார்க் ரீடர்) தாளில் சில மாற்றங்களை செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேர்வாணையம் OMR விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in – “OMR Answer Sheet – Sample” என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
வினாத் தொகுப்பு எண் வட்டங்கள் கருப்பு நிற பேனாவினால் (Ballpoint pen) நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1ல் பகுதி-Iன் கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2-ல் பகுதி-Iன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்