தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ.340.97 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!

தமிழகம்

சென்னை வெளிவட்ட சாலை அமைப்பதில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக தனியார் நிறுவனத்திற்கு ரூ.340.97 கோடி இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் 29.5 கி.மீ நீளம் கொண்ட வெளிவட்ட சாலை அமைப்பதற்கான ஏலத்தை கடந்த 2009ம் ஆண்டு ஜிஎம்ஆர் தனியார் கட்டுமான நிறுவனம் கைப்பற்றியது.

அதன்படி தமிழக அரசு மற்றும் ஜிஎம்ஆர் நிறுவனத்திற்கு இடையே ரூ.1,166.75 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் வெளிவட்ட சாலை அமைக்கும் பணியை 30 மாதங்களுக்குள் (913 நாட்கள்) நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2010 ஜூன் 3ம் தேதி தொடங்கி, 2012 ஜூன் 2க்குள் பணியை முடிப்பது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

காலதாமத்தால் ஏற்பட்ட நஷ்டம்!

எனினும், இந்திய ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்றத் தவறியது. மேலும் வெளிவட்ட சாலை அமைய உள்ள இடங்களில் நில பிரச்சனையை சமாளிக்கவும் அரசு தரப்பு தவறியது.

இதனால் ஒப்பந்தத்தில் கூறியபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சாலை அமைக்கும் பணியை நிறுவனத்தால் தொடர முடியவில்லை. மேலும் இந்த காலதாமதத்தால், பொருட்களுக்கான செலவுகள், வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்துதல் போன்றவற்றால் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

TNGovt ordered to pay compensation of Rs.340.97 crore to gmr

எனவே, 2015ம் ஆண்டு ரூ.675.06 கோடி வழங்கக் கோரி, தீர்ப்பாயம் நடுவர் மன்றத்தை ஜிஎம்ஆர் நிறுவனம் நாடியது. விசாரணையின் முடிவில், 2020ம் ஆண்டு தீர்ப்பளித்த நாளிலிருந்து 18% வட்டியுடன் ரூ.340.97 கோடியை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இதனை ஆண்டுக்கு 18% வீதம் வட்டியுடன் 9% நிலுவைத் தொகை வட்டியுடன் சேர்த்து செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தமிழக அரசின் மனு நிராகரிப்பு!

இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த ஆண்டு தமிழக அரசு உயர் நீதிமன்ற தனி நீதிபதியிடம் முறையிட்டது. அதே வேளையில் தீர்ப்பாயம் உத்தரவின்படி தமிழக அரசு வட்டியை வழங்க மறுத்ததை எதிர்த்து ஜிஎம்ஆர் நிறுவனமும் நீதிமன்றத்தை அணுகியது.

இரு தரப்பு மனுவையும் விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், அரசாங்கத்தின் மனுவை நிராகரித்து, தனியார் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 9% என்ற விகிதத்தில் நிலுவையை வழங்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

தனி நீதிபதி உத்தரவில் தலையிட காரணம் இல்லை!

நீதிபதி சதீஷ்குமாரின் 2 உத்தரவுகளுக்கும் வருத்தம் தெரிவித்த அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 12) நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தனி நீதிபதி சதீஷ் குமாரின் உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறி தமிழக அரசின் மனுவை நிராகரித்தது. மேலும் தனியார் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடாக ரூ.340.97 கோடி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பணம் வளர்ப்பா…? குழந்தை வளர்ப்பா..?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *