வெளிமாநில பதிவெண் கொண்ட 838 பேருந்துகளின் பட்டியலை தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி, நாகாலாந்து, சிக்கிம், கர்நாடகா போன்ற வெளிமாநில பதிவெண் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு விதிகளை மீறி இயங்கும் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளால், அரசுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.34.56 கோடி இழப்பு ஏற்படுகிறது.
இதனால் அவற்றை தமிழக பதிவு எண்ணுக்கு மாற வேண்டும் என சாலை போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு 7 மாத கால அவகாசம் வழங்கியது.
அதன்படி 105 பேருந்துகள் தங்களது பதிவு எண்ணை தமிழ்நாட்டிற்கு மாற்றிவிட்ட நிலையில், சுமார் 830 ஆம்னி பேருந்துகள் அப்படியே இயங்கி வந்தன.
அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
இந்த நிலையில் பேருந்து பதிவெண் மாற்றுவதற்கான அவகாசம் கடந்த14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளின் இயக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.
ஆனால் வார இறுதி விடுமுறை, பக்ரீத் விடுமுறையை சுட்டிக்காட்டி போக்குவரத்துத் துறை ஆணையரை சந்தித்த பேருந்து உரிமையாளர்கள், ‘கால அவகாசம் வேண்டும்’ என கோரினர். இதனை ஏற்று 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டது.
முன்பதிவு செய்ய வேண்டாம்!
தொடர்ந்து அந்த அவகாச காலமும் நிறைவடைந்ததையடுத்து அந்த 800 பேருந்துகளையும் இனி தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்க முடியாது என்றும், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பிறமாநில ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம். முன்பதிவு செய்துள்ள மக்கள் அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாக அறிவித்தார்.
அதேவேளையில் அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று இயங்கும் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து இயங்க எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி இயங்கும் 838 பிற மாநில ஆம்னி பேருந்துகளின் விவரங்களை www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மறு பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும்!
இதற்கிடையே கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனையடுத்து செய்தியாளர்களிடம் சங்கத் தலைவர் அன்பழகன் பேசுகையில், “தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளில் ஒரு படுக்கைக்கு காலாண்டுக்கு ரூ.4000 சாலை வரி செலுத்துகிறோம். வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு ஒரு படுக்கைக்கு காலாண்டுக்கு ரூ.5500 செலுத்துகிறோம்.
எனினும் அவற்றை தமிழக பதிவெண்ணுக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு கடந்த 6 மாதங்களாக வலியுறுத்தி வருகிறது. அதன்படி பாதி பேருந்துகளை நாங்கள் தமிழகத்தில் பதிவு செய்துவிட்டோம். பொருளாதாரப் பிரச்னைகள், தொடர் பண்டிகைகள், தேர்தல் ஆகியவை காரணமாக பதிவு செய்ய முடியாமல் போனது. எனவே குறைந்தது ஒரு மாத காலமாவது அவகாசம் வழங்க வேண்டும் என்றும், ஆம்னி பேருந்துகளை மறு பதிவு செய்ய சிறப்பு முகாம்களை நடத்தவும் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று கூறினார்.
எனினும் ஏற்கெனவே பலமுறை அவகாசம் வழங்கப்பட்டதால், இனி அதற்கு வாய்ப்பில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
விக்கிரவாண்டி: அமைச்சர்கள் புடைசூழ அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்!
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு… பாஜக மாநில துணைத்தலைவர் மீது புகார்!