ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!
சென்னை டிபிஐ வளாகத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடந்த மே 9 ஆம் தேதி முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் 5வது நாளாக இன்றும் தொடர்ந்தது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் டிபிஐ வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி 177-ன்படி, பணிநியமனத்துக்கு போட்டித்தேர்வு நடத்தும் முடிவை கைவிடும்வரை போராட்டம் தொடரும் என்று அச்சங்கத்தின் மாநில தலைவர் கபிலன் சின்னச்சாமி, துணைத் தலைவர் மு.வடிவேலன் அறிவித்திருந்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் சில ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
போராட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இவர்களுக்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவும் அளித்தனர்.
இந்நிலையில் இன்று (மே 13) உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி போராட்டம் நடத்திய ஆசிரியர்களை நேரில் சென்று சந்தித்தார்.
ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பொன்முடி, அவர்களது கோரிக்கை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார்.
அவர்களுக்கான வயதை 47 ஆக கடந்த ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை 52 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் இதில் சட்ட ரீதியாக சில பிரச்சினை உள்ளதால் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு வார காலத்திற்குள் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து தொடர்ந்து 5 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்தனர்.
மோனிஷா
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்கள் வாழ்த்து!