Refused to take ticket Issue

“நிர்வாக குளறுபடியால் சிக்கலில் போக்குவரத்து கழகம்” : சிஐடியு சௌந்தரராஜன்

தமிழகம்

அரசு பேருந்துகளில் சரிபாதி தகுதியற்றவை என்று சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் அரசு பேருந்தில் சீருடையுடன் ஏறிய ஆயுதப்படை காவலர் ஆறுமுக பாண்டி, டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து துறை போலீசார் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங், சீருடை ஒழுங்காக அணியவில்லை உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதனால், போக்குவரத்து துறைக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (மே 24) நாகர்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறுகையில், “அரசு பேருந்துகளில் , போக்குவரத்து துறையில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் அவர்களது குடும்பத்தினர். ஆகியோர் இலவசமாக பயணிக்கலாம் என்ற நிலை இருக்கிறது.

Refused to take ticket Issue
வேறு யாரெல்லாம் இலவசமாக பயணம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் முடிவு. இப்போது பெண்களுக்கு இலவச பயண திட்டம், மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம் உள்ளது. அவர்கள் பயணிப்பதற்கான டிக்கெட் கட்டணத்தை அரசாங்கம் எங்களுக்கு ஈடுகட்டி கொடுத்து விடுகிறது.

காவல்துறைக்கும் இலவச பயணம் என்று அரசு முடிவு எடுக்குமானால் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அவர்கள் பயணம் செய்வதற்கான கட்டணத்தை ஈடு செய்ய வேண்டும். அரசாங்கம் ஈடுகட்டவில்லை என்று சொன்னால் போக்குவரத்து கழகம் செத்துப்போகும்.

காவல்துறையினருக்கு இலவச பயண அனுமதி அளிக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்லலாம்… அவர் ரயில்களில் காவல்துறையினரை இலவசமாக பயணிக்க விட்டுவிடுவாரா.

இன்று காவல்துறைக்கு கொடுக்க வேண்டும் என்றால், நாளை கல்வித்துறை, மருத்துவத்துறை என எல்லாத் துறைகளுக்கும் கொடுக்க வேண்டியிருக்கும்.

கொடுங்கள்… வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு ஏற்படும் செலவை போக்குவரத்து துறைக்கு கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்.

மேலும், மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகையை ரத்து செய்த அரசாங்கம்… உங்கள் அரசாங்கம் என்று அண்ணாமலையை சுட்டிக்காட்டி பேசிய அவர், ” 100 நாள் வேலை திட்டம், கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றுக்கான மானியங்களை உங்கள் அரசு நிறுத்திவிட்டது” என்று என்றார்.

போக்குவரத்து ஊழியர்கள் விதிமுறைப்படி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்த சௌந்தரராஜன், “நாங்குநேரியில் பயண சீட்டு வாங்காமல் நடத்துநரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும்.

சட்டத்தை அமல்படுத்தக்கூடிய காவல்துறையினரே சட்டத்தை மீறி செயல்படுவதை ஏற்க முடியாது” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “போக்குவரத்து கழகங்களில் உள்ள பேருந்துகளில் சரிபாதி இன்று தகுதியற்றவையாக உள்ளன. 6 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமாக இயக்கப்பட்ட பேருந்துகளை நிறுத்த வேண்டும். புதிய பேருந்துகளை விட வேண்டும்.

கொரோனா காலத்தில் இழப்பு ஏற்பட்டதால் கூடுதலாக இரண்டு வருடம் இந்த பேருந்துகளை இயக்கிக் கொள்ள மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இயக்கினார்கள். அந்த கால அவகாசத்தையும் கடந்து இப்போது இந்த பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

புதிய பேருந்துகள் வரும் என்று சொல்கிறார்கள்… ஆனால் இது அறிவிப்போடு மட்டுமே நிற்கிறது.

புதிய பேருந்துகளுக்கு பணம் ஒதுக்கி முன்னுரிமை அடிப்படையில் பேருந்துகளை வாங்க வேண்டும். பேருந்துகளை பழுது பார்க்க வேண்டும். இல்லையென்றால் போக்குவரத்து தொழில் சிறப்பாக இருக்காது.

பேருந்துகளுக்கு தேவையான உபகரணங்கள், போதுமான தொழிலாளர்கள் இல்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது. உரிய நேரத்தில் பேருந்துகளை இயக்க முடிவதில்லை.

நிர்வாக குளறுபடி காரணமாக இப்படி சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து கழகங்கள் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை.

போக்குவரத்து கழகத்தை அரசு பாதுகாக்க தவறிவிட்டது. ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பண பலன்கள் நிலுவையில் இருக்கின்றன. அதை அரசு உடனே தர வேண்டும்.

இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது.

தற்போது தேர்தல் நடந்து வருவதால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. தேர்தல் முடிந்த பிறகு அடுத்த கட்ட போராட்டம் குறித்த அறிவிப்போம்.

எங்களுக்கு போராட்டம் நடத்துவதில் விருப்பமில்லை. ஆனால் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேறு வழி இல்லை” என தெரிவித்தார்.

-பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு : ESIC -ல் பணி!

விமர்சனம்: டர்போ!

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் ரிலீஸ் அப்டேட்!

6ஆம் கட்ட தேர்தல்… 11.13 கோடி வாக்காளர்கள்… விறுவிறு வாக்குப்பதிவு!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
4
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *