சர்வர் பிரச்சினை காரணமாக தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பணப்பலன்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழக தொழிலாளர் நல வாரியத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் மற்றும் அதனை சார்ந்த 16 வகையான தொழிலாளர் நல வாரியங்கள் உள்ளன.
இந்த நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 6-ம் வகுப்பு முதல் மேல் படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மகப்பேறு நிதி, திருமண நிதி, 60 வயதை நிறைவு செய்யும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விபத்து மற்றும் இயற்கை மரண நிதி உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இதற்கு நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது நல வாரிய அட்டையை புதுப்பிக்க வேண்டும். கடந்த ஆட்சியின் இறுதியில் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பணப்பலன்கள் பெறுவது மற்றும் பதிவுகள் அனைத்தும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், சர்வர் கோளாறால் கடந்த டிசம்பர் 2-ம் தேதி முதல் நல வாரியத்தில் புதுப்பித்தல் மற்றும் பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
இதுகுறித்து பேசியுள்ள சிஐடியு மாநிலக் குழு உறுப்பினரும், தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளருமான ர.கிருஷ்ணவேணி,
“தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளனர்.
முன்பு தொழிலாளர் அலுவலகத்துக்கு சென்று புதிதாக நலவாரியத்தில் இணைவது, புதுப்பிப்பது, திருமண உதவி நிதி, ஓய்வூதியம் பெறுவது உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது அடிக்கடி சர்வர் பிரச்சினை ஏற்பட்டு புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாததால் பணப்பலன் பெறுவதில் சிக்கல் உருவாகி வருகிறது.
கடந்த 2-ம் தேதி முதல் சர்வர் பிரச்சினை இருப்பதால் 4-ம் தேதி நலவாரிய அட்டை புதுப்பித்தல் உள்ள தொழிலாளி, 10-ம் தேதி 60 வயதை நிறைவடைந்திருந்தால் அவருக்கு ஓய்வூதியத்தை பதிவு செய்ய முடியாது.
இதனால் ஓய்வூதியம் கிடைக்காது. இதுபோல் மகப்பேறு, திருமணம் மற்றும் இறப்பு போன்றவற்றுக்கும் பணப்பலன்கள் பெற முடியாது.
ஒரு மாதமாகியும் சர்வர் பிரச்சினை சரி செய்யப்படவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சர்வர் பிரச்சினை ஏற்படும் காலங்களில் நேரடியாக விண்ணப்பங்களை பெற உத்தரவிட வேண்டும்.
கடந்த 2-ம் தேதி முதல் சர்வர் பிரச்சினை சரி செய்யப்படும் காலம் வரை புதுப்பித்தல் உள்ள தொழிலாளர்களுக்கு கால அவகாசம் வழங்கி, பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: மோடி விழாவில் திருச்சி தந்த ஷாக்- ஸ்டாலின் நடத்திய விசாரணை!
ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணி: அமேசான் காட்டில் ஷூட்டிங்?
பாஜகவில் இணைந்த சப் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்: அண்ணாமலை சொல்வது என்ன?