கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மூன்றாவது முறையாக உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்து 17 பேர் வரை உயிரிழந்தனர். தொடர்ந்து 2021 செப்டம்பரில் 12 வயது சிறுவன் நிபா பாதிப்பால் இறந்தது மக்களிடையே பீதியை எழுப்பியது.
2 பேர் பலி!
இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்று வந்த மருதோங்கரையைச் சேர்ந்த கல்லாட் முஹம்மதலி(49) என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி உயிரிழந்தார்.
அதே மருத்துவமனையில் கடந்த 10-ந்தேதி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆயஞ்சேரியைச் சேர்ந்த மங்கலட் ஹரீஸ் (40) என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மேலும் இரண்டாவதாக இறந்த ஹரீஸின் மனைவி, 9 மற்றும் 4 வயதுடைய 2 மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என 4 பேரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அதே தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம், கடந்த திங்கள் கிழமை இரவு மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்தது.
பரிசோதனையில் உறுதி!
இருவரின் உயிரிழப்பு மற்றும் மற்றும் 2வதாக இறந்த ஹரீஸ் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் நிபா வைரஸ் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
அதனால் அவர்களின் ரத்தம், உமிழ்நீர் திரவம் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள வைரஸ் நோய் தொற்றுகளை கண்டறியும் தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் காய்ச்சலுக்கு இறந்த 2 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் 2 பேரும் நிபா வைரஸ் பாதித்து தான் இறந்ததை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா டெல்லியில் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தினார்.
அதே நேரத்தில் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் ஹரீஸ் குடும்பத்தினரில், மனைவி (25) மற்றும் மகன்(9) ஆகியோர் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக நான்கு வயது மற்றும் 10 மாத குழந்தைக்கு பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட 168 பேர்!
இதனையடுத்து கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்த நபர்களிடம் நேரடி தொடர்பு கொண்ட 168 பேர் அடையாளம் காணப்பட்டு சுகாதாரத்துறையினர் அறுவுறுத்தலின் பேரில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு்ள்ளனர்.
இதில் இறந்தவர்களுடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர்.
கேரளா செல்லும் மத்திய நிபுணர் குழு!
இதுகுறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், “மாநில அரசின் நிபா நெறிமுறையின்படி தடுப்பு மற்றும் நோய் மேலாண்மை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். நோயாளிகளின் சிகிச்சைக்காக ICMR இலிருந்து மோனோக்ளோனல் ஆன்டிபாடி கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும்.
நிபா வைரஸ் கண்காணிப்பு, மாதிரி சோதனை, தொடர்பு கண்டறிதல் மற்றும் நோயாளிகளின் போக்குவரத்து போன்ற நடவடிக்கைகளுக்காக 16 முக்கிய குழுக்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நிபா வைரஸ் பரவலை கண்காணிக்கவும், கள நிலவரத்தை ஆய்வு செய்யவும், ஐசிஎம்ஆர்-என்ஐவி, புனே ஐசிஎம்ஆர் மற்றும் சென்னையிலிருந்து தொற்றுநோயியல் ஆகிய மூன்று மத்திய நிபுணர் குழுக்கள் இன்று கோழிக்கோட்டிற்கு வருகின்றனர்” என்று வீனா ஜார்ஜ் கூறினார்.
தமிழ்நாட்டில் எச்சரிக்கை!
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளது தற்போது தமிழ்நாட்டிலும் எதிரொலித்துள்ளது. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை உள்பட தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து கேரளாவில் இருந்து காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் தமிழ்நாடு எல்லைக்குள் வருவோரிடம் உடல்நல பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிபா வைரஸ் அறிகுறிகள்!
நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியாக காய்ச்சல், வாந்தி, தலைவலி மற்றும் சுவாசக் கோளாறுகள் ஆகியவை அடங்கும்.
கிறிஸ்டோபர் ஜெமா
டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவிகித ஜிஎஸ்டி வரியா?
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?