இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: முதல்வர் அறிவிப்பு!

தமிழகம்

தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனின் 66 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிலையில் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு அவரது சிலையுடன் கூடிய மணி மண்டபம் ரூ.3 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், “ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு திருவுருவச்‌ சிலையுடன்‌ கூடிய மணிமண்டபம்‌ அமைக்கப்பட வேண்டும்‌ என்பது அப்பகுதி மக்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில்‌ தேவேந்திர குல வேளாளர்‌ கல்வியாளர்‌ குழு, தேவேந்திரர்‌ பண்பாட்டுக்‌ கழகம்‌, இம்மானுவேல்‌ சேகரனாரின்‌ மகள்‌ சூரிய சுந்தரி பிரபா ராணி மற்றும்‌ அன்னாரது பேரன்‌ சக்கரவர்த்தி ஆகியோர்‌ தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில்‌ சந்தித்து இக்கோரிக்கையினை வலியுறுத்தினர்‌.

தியாகி இம்மானுவேல்‌ சேகரனார்‌ 1924-ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ 9 அன்று பிறந்தார்‌. இவரது சொந்த ஊர்‌ முதுகுளத்தூர்‌ வட்டம்‌, செல்லூர்‌ கிராமம்‌ ஆகும்‌. இவர்‌ 1942-இல்‌ ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்‌ கலந்து கொண்டு சிறைவாசம்‌ சென்றார்‌. மேலும்‌ ஒடுக்கப்பட்டோர்‌ விடுதலைக்காகவும்‌ போராடியவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்‌ பொதுமக்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கையினை நிறைவேற்றி போற்றும்‌ வகையில்‌ அவரது பிறந்தநாள்‌ நூற்றாண்டினையொட்டி அன்னார்‌ நல்லடக்கம்‌ செய்யப்பட்ட இராமநாதபுரம்‌ மாவட்டம்‌, பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில்‌ சுமார்‌ ரூபாய்‌ 3 கோடி மதிப்பீட்டில்‌ தியாகி இம்மானுவேல்‌ சேகரனாருக்கு திருவுருவச்‌ சிலையுடன்‌ கூடிய மணிமண்டபம்‌ தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ கட்டப்படும்‌” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மாவட்டம் முழுவதும் 3 டிஐஜிகள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 31 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 71 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 124 காவல் ஆய்வாளர்கள் என 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

US Open: சாம்பியன் பட்டம் வென்று பழித்தீர்த்த ஜோகோவிச்!

சுற்றுலா சென்று திரும்பும் போது கோர விபத்து: 7 பேர் பலி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *