meeting with spinning mills today

வேலை நிறுத்தம்: நூற்பாலை உரிமையாளர்களுடன் இன்று பேச்சுவார்த்தை!

தமிழகம்

தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வங்கிக் கடன் வட்டி உயர்வு, துணிகள் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து கடந்த 15ஆம் தேதி முதல் நூற்பாலைகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 21) நூற்பாலை அதிபர்களுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. இங்கு 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

meeting with spinning mills today

தமிழகம் முழுவதிலும் உள்ள நூற்பாலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கில் நூல்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.400 கோடிக்கும் மேல் அந்நிய செலாவணி கிடைத்து வந்தது.

இந்த நிலையில் நூற்பாலைகளின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக ஜவுளி வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளிகளின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்பாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 21) நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதற்காக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், ஓபன் என்ட் நூற்பாலைகள் சங்கம், மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பு,

meeting with spinning mills today

இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு, தென்னிந்திய மில்கள் சங்கம், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நூற்பாலை உரிமையாளர்கள்,

“நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில் முடக்கம் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளோம். எனவே வேறு வழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ள தமிழக அரசுக்கு நன்றி.

தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் எங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க, பருத்தி மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தொடரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, நூற்பாலை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: வரகரிசி சொஜ்ஜி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *