சாதியின் பெயரால் நடைபெறும் குற்றங்களும் ஆணவக் கொலைகளும் தமிழ்நாட்டில் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளன. காதல் விவகாரத்தால் ஆண்டுதோறும் 120 முதல் 150 கொலைகள் நடைபெறுவதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் தற்போது மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. fullstop to caste basted murders
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிசெல்வம் (24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இவர்கள் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.முத்துராமலிங்கத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூத்த மகளான கார்த்திகா, பொருளாதார வசதி குறைவான மாரிச் செல்வத்தை காதலித்ததால் இவர்களது காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த 30-ந் தேதி மாரிசெல்வம், கார்த்திகாவை அழைத்துச் சென்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அதன்பிறகு கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் தங்கள் வீட்டாருக்கு பயந்து இருவரும் கோவில்பட்டியிலேயே தங்கி இருந்துள்ளனர்.
3 நாட்களுக்குப் பின் நேற்று காலை முருகேசன்நகரில் உள்ள மாரிசெல்வத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனையறிந்து மாரி செல்வத்தின் வீட்டுக்கு நேற்று மாலை 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் 6 பேர் , மாரிச்செல்வம்- கார்த்திகா ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
எதிர்பாராமல் நடந்த இந்த தாக்குதலில் இருவரின் கழுத்துகள் அறுக்கப்பட்ட நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தடவியல் நிபுணர்களும் மோப்பநாய் ஜினோ வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியானது துவங்கியது.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.
இக்கொலை தொடர்பாக கார்த்திகாவின் உறவினர்கள் பரத், கருப்பசாமி, ராஜபாண்டி, இசக்கி ராஜா, பரத் மற்றும் ஒரு இளம்சிறார் என 6 பேரைக் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இருவரின் உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் நேற்று வைக்கப்பட்டிருந்தது
இதைத் தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடற்கூறாய்வு செய்வதற்காக உடல்கள் வாகனம் மூலம் எடுத்து சென்று தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி பின்புறம் உள்ள உடல்கூறாய்வு கூடத்தில் உடல்கூறாய்வு நடைபெற்றது.
பின்னர் இருவரது உடல்களும் தூத்துக்குடி மையவாடி கிடங்கில் மாரிச்செல்வம் வீட்டார் முன்னிலையில் எரியூட்டப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து சாதிய ரீதியான குற்றங்கள் நடப்பதும் அவற்றிற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் குரல் கொடுப்பதும் தற்போது வாடிக்கையாகி உள்ளது. இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து இதுபோன்ற கொலைகளைக் கட்டுப்படுத்த அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்னும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. fullstop to caste basted murders
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்முகப் பிரியா
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக ஐ.டி சோதனை!
மாணவர்களை அடித்த விவகாரம்: நடிகை கைது!