தமிழகத்தில் அரசுப் பணிகளை தனியாருக்கு திறந்துவிடும் விதமாக மனித வள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ ரத்து செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கம் நேற்று (நவம்பர் 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 18.03.2022. அன்று நிதியமைச்சர் 2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையினை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது நிர்வாக சீர்திருத்தங்கள் என்ற தலைப்பின் கீழ், “பணியமர்த்தல் மற்றும் பயிற்சிக்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை இவ்வாண்டு தொடங்கி உள்ளோம்.
மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஆறு மாத கால அளவிற்கு முன்மொழிவதற்கான மனிதவள சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
நிதி அறிக்கையினை வெளியிட்ட போதே இது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களிடம் எழுந்தன.
மனிதவள சீர்திருத்தக் குழு!
இந்நிலையில், 18.10.2022 அன்று மனிதவள மேலாண்மை துறையானது, மனிதவள சீர்திருத்தக் குழுவினை அமைத்து அரசாணை வெளியிட்டது.
ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம். எப். பரூக்கியை தலைவராக கொண்ட அக்குழுவில், சந்திர மெளலி, ஜோதி ஜெகராஜன், சந்திரா தேவி தணிகாசலம், லெட்சுமி நாராயணன் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்தக் குழுவானது அரசாணை வெளிடப்பட்ட ஆறு மாதங்களுக்குள்ளாக அறிக்கையினை தாக்கல் செய்யும் என ஆணையிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சியை முடக்கும் செயல்!
மனிதவள மேலாண்மை துறையால் அமைக்கப்பட்டுள்ள மனிதவள சீர்திருத்தக் குழு தொடர்பான பின்வருபவனவற்றை தமிழக முதலமைச்சரின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
- மனிதவள சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து வரம்புகளுமே சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கையாகும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒன்றிய அரசின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை 9ல் அரசு பணிகளில் 69 விழுக்காடு என்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.
அதன்படி 1967 முதல் கடந்த 55 ஆண்டுகளாக தமிழகத்தில் சமூக நீதி பாதுகாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில். மனிதவள மேலாண்மைதுறையின் அரசாணையானது, அரசியலமைப்பின்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு மாநில
தேர்வாணையத்தின் செயல்பாடுகளை முடக்கி, அதனை ஒரு சம்பிரதாய அமைப்பாக மாற்றக்கூடியதாக உள்ளது.
தனியாருக்கு சிவப்பு கம்பளம்!
- தலைமைச் செயலகத்தில் தொகுதி ’டி’ என்ற பிரிவின் கீழ் வரும் அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின்
ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் காலியாக உள்ளது. இவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை எப்போதோ அரசால் கைவிடப்பட்டுவிட்டது.
இப்பணியிடங்களை பொறுத்தவரை, சமூகத்தின் அடித்தட்டு மக்கள் படிப்பினை தொடர முடியாமல் பல்வேறு சூழ்நிலைகளில் பாதிக்கப்படுவோர் இதுநாள் வரையில் தொகுதி டி மூலமாக அரசு பணியில் வருவதற்கான வாய்ப்பாக இருந்தது. இந்த வாய்ப்பானது கடந்த 10 ஆண்டுகளாக முற்றிலும் மறுக்கப்பட்டுவிட்டது.
- தொகுதி ’டி’ காலி பணியிடங்களுக்குதான் இந்த அவலநிலை என்றிருந்தால், தற்போதைய மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணையில் தொகுதி ‘சி’ பணியிடங்களையும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான முகாந்திரங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில் பறிக்கப்பட்ட உரிமை!
- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2001 – 2006 ஆட்சிக் காலத்தில், தற்போது மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையினைப் போல், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏ.எம் சுவாமிநாதன் தலைமையில் ஊதியம் மற்றும் செலவினச் சீர்திருத்தங்கள் குழு என்ற ஒன்றினை அமைத்தார். அதோடு மட்டுமல்லாமல், மாநில அரசின் வருவாயில், 97 சதவீதம் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செலவாகிறது என்று தெரிவித்து பன்னெடுங்காலமாக போராடி பெற்ற உரிமைகளை பறித்தார்.
மேலும் இந்தியாவில் எந்த மாநிலமும் நடைமுறைபடுத்தாத ஒய்வூதியத் திட்டத்தினை 1-4-2003க்கு பிறகு அரசுப் பணியில் சேர்வோருக்கு நடமுறைப்படுத்தினார். இதன் தொடர்சியாக 2003ல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட, 1,73,000 பணியாளர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்தார். இப்போராட்டத்தின் போது, முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மீது நாசகார டெஸ்மா சட்டம் போடப்பட்டது என்பது வரலாறு. அதன் உச்சக்கட்ட நடவடிக்கையாக, அரசுப் பணிக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டது.
தடையாணை நீக்கம்!
- 2006ல் தமிழக முதலமைச்சராக கலைஞர் பொறுப்பேற்றவுடன் அரசுப் பணியில் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தடையாணை நீக்கப்பட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீண்டும் புத்துணர்வு பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், ஏ.எம் சுவாமிநாதன் குழு அளித்த அறிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு!
- கடந்த அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் 2017 ஆம் ஆண்டு, ஊதியக் குழுவினை அமல்படுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, 3 மாதங்களுக்குள்ளாக அமல்படுத்த வேண்டும். தவறினால் நீதிமன்றமே ஊதிய மாற்றத்தினை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், ஊதிய மாற்றம் அமல்படுத்தப்பட்டபோது, ஊதிய மாற்றத்திற்கே தொடர்பில்லாத வகையில், அரசாணை 56ஐ வெளியிட்டு, ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அரசு பணிகளில் உள்ள காலி பணியிடங்களை கண்டறிந்து, அப்பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான வழிவகைகளை தெரிவிக்குமாறு ஆணையிட்டது.
அரசாணை 115 : சமூக அநீதி!
- ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை தான் தற்போதைய மனிதவள மேலாண்மை துறையின் அரசாணை 115 தெளிவுபடுத்துகிறது. நிதிநிலை அறிக்கையில் தெரிவித்த கருத்துகளுக்கான பின்புலம் என்பது சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கையாக அமைந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
மேலும் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இதுநாள் வரை மனிதவள மேலாண்மைத் துறையின் இணையப்பக்கத்தில் வெளியிடப்படவில்லை. இதன்மூலம் இந்த மனிதவள சீர்திருத்தக்குழு கமுக்கான முறையில் செயல்பட போகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
- இக்குழுவின் எல்லை வரையறைகளைப் முழுமையான அரசுப் பணியினை கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கையே என்பது தெள்ளத் தெளிவாகிறது. அரசு பணியின் மதிப்பீடு என்பது இலாப நட்ட கணக்கு பார்க்க கூடிய விஷயமல்ல. ஏற்கனவே, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள பல்வேறு மருத்துவச் சேவை பணிகளின் நிலை என்பது அனைவரும் அறிந்ததே.
பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அனைத்தையும் தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கை என்பதனை எள்ளளவும் ஏற்க இயலாது. தனியார் வசம் ஒப்படைக்கும்போது, அவர்கள் இலாப நோக்கத்துடன் இயங்குவார்களே அன்றி சேவை மனப்பான்மையோடு செயல்பட வாய்ப்பில்லை.
- தற்போது தனியார் துறைகளில் கூட இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் போது, அரசு பணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யாமல், வெளிமுகமை / ஒப்பந்த அடிப்படை / தனியார் வசம் என சில பணிகளை விடுவது என்பது முற்றிலுமாக தமிழக அரசு பின்பற்றுகின்ற 69 விழுக்காடு இடஒதுக்கீடு அதாவது சமூக நீதிக்கு எதிரானது.

- அரசுப்பணியில் தற்போது 35 விழுக்காட்டிற்கும் மேல் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், அப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு என்பது இல்லாமல் போய்விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசுப் பணிக்காக தயார்படுத்தி வரும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவை அமைய வேண்டும் என்ற குழுவின் ஆய்வு வரம்பானது இனிவரும் காலங்களில் பதவி உயர்வினை கேள்விக்குறியாக்கி விடும்.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது!
- தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறையால், தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் / கழகங்கள் / வாரியங்கள் ஆகியவற்றில் உள்ள காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்புவதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதற்கு முரணாக மனிதவள மேலாண்மைத் துறையே தற்போது, அரசுப் பணிகளை தனியார் வசம் / வெளிமுகமை / ஒப்பந்த அடிப்படை என்ற நிலைக்குக் கொண்டு செல்லும் மனிதவள மேலாண்மைக் குழுவினை அமைத்து, அக்குழுவிற்கான ஆய்வு வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளது என்பது அத்துறையே சட்டமன்றத்தில் கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு முரணாக செயல்படும் போக்காகும்.
- ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், வழக்கமாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும், சரண் விடுப்பும் மறுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்படுமா என்பது அனைத்து அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மனச்சோர்வினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இனிமேல் அரசுப்பணி என்பதற்கே வாய்ப்பில்லை என்ற நிலையை ஏற்படுத்தக்கூடிய மனிதவள மேலாண்மைத் துறையின் அரசாணை 115 ஆனது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
அரசாணை 115ஐ ரத்து செய்க!
மேற்சொன்ன சூழ்நிலையில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்
தீர்க்கமான பார்வையோடு ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் மீது மாறாத அன்பும் பற்றும் கொண்டுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு,
தமிழகத்தில் நடைமுறையிலுள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் மூலம், சமூக நீதியை நிலைநாட்டும் வகையில், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையிலும் மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசாணை 115ஐ ரத்து செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , படித்த இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பு கனவை சீர்குலைக்கும் அரசாணை 115-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா