லியோ டிரெய்லர் வெளியான போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு போலீசாரே காரணம் என்ற உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துக்கு மாநில அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரும் அக்டோபர் 29-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்டோபர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை எதிர்த்து ஆஜரான மாநில அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ”ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பாதையில் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் நிறைந்திருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றார்.
காவல்துறையே காரணம்!
இதனைக்கேட்ட நீதிபதி, ’காவல்துறை தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். மேலும் “நேற்று லியோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி திரையரங்கு சேதப்படுத்தப்பட்டதற்கு காவல்துறையின் தவறான அணுகுமுறையே காரணம்” என்று தனது அதிருப்தியை தெரிவித்தார்.
மேலும் டிரெய்லரை பார்க்கிங்கில் ஸ்கிரீன் அமைத்து ரிலீஸ் செய்து தேவையான பாதுகாப்பை காவல்துறை அளித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தால் பிரச்சனை வந்திருக்காது என்றும், இதேபோன்று, ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சியிலும் ரசிகர்களை கையாள காவல்துறை தவறியதே குளறுபடிக்கு காரணம் என்றும் நீதிபதி கூறினார்.
பாதுகாப்பு வழங்க தயார்!
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ஜின்னா, ”நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு எதிராக காவல்துறைக்கு எந்த விரோதமும் இல்லை. லியோ படத்தின் தயாரிப்பாளர்கள் இசை வெளியீட்டு விழாவை இன்றும் நடத்த விரும்பினால் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.
தமிழக அரசிற்கு எதிராக பிரச்சாரம்!
லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட போலீஸ் கமிஷனரிடம் ரோகிணி தியேட்டர் நிர்வாகம் எந்த அனுமதியும் பெறவில்லை. அதனால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
நடிகரின் வெறித்தனமான ரசிகர்களால் தியேட்டரில் உள்ள இருக்கைகள் சூறையாடப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வந்தாலும், இது தொடர்பாக காவல்துறையில் இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்தானதை அடுத்து, நடிகர் விஜய் ரசிகர்களை தமிழக அரசிற்கு எதிராக தூண்டிவிடும் நோக்கம் கொண்ட ஒரு விஷமம் நிறைந்த பிரச்சாரம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது குறித்து காவல்துறை தானாக முன்வந்து தற்போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால், அது மீண்டும் நடிகர் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எதிராக அரசும் காவல்துறையும் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்” என்று கூறினார்.
ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடிக்கான காரணம்!
மேலும், “ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் காவல்துறை தரப்பில் தவறு இல்லை. போலி டிக்கெட்டுகளை அதிகளவில் அச்சடித்து விநியோகித்ததே முக்கிய காரணம்.
இதேபோன்று லியோ இசை வெளியீட்டு விழாவின் போலி டிக்கெட்டுகளும் முன்னதாகவே சமூகவலைதளங்களில் பரவியது. ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த குளறுபடி போன்று மீண்டும் நிகழ்ந்துவிட கூடாது என்பதற்காகவே லியோ இசை வெளியீட்டு விழா தொடர்பாக படக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனை ஏற்று படக்குழுவும் தானாகவே முன்வந்து இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது” என்று நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஜின்னா விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து ஆர்எஸ்எஸ் பேரணி மனு மீதான விசாரணையை வரும் அக்டோபர் 11ம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
154 சவுக்கடி பெற்ற போராளிக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
விஜய்க்கு எடப்பாடி விட்ட தூது!