இலங்கைக் கடற்படையினரால் ஏழு தமிழக மீனவர்கள் நேற்று (அக்டோபர் 27) கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்கடிதத்தில் IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் நேற்று (27-10-2022) மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்கள்,
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஏற்கெனவே தமிழக மீனவர்களின் 98 மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால்,
ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் தாம் வலியுறுத்த விரும்புவதாகவும்,
பாக்ஜலசந்திப் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது, இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட வலுவான,
மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்ற தனது இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏ.விடம் வழங்கியதில் தாமதமா?: அமைச்சர் பதில்!
ரூ.1000 பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்!