சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்டு 16) ஆய்வு செய்தார். அப்போது, 10 இலட்சமாவது நுகர்வோருடன் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்சார சேவை பற்றி கேட்டறிந்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற மின் நகர்வோர் சேவை மையம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 3.10 கோடி மின் இணைப்பு தாரர்கள் உள்ள நிலையில், மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் இங்கு கேட்கப்பட்டு, அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் புகாரை கேட்டறிந்த முதல்வர்!
இந்நிலையில், மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னக சேவை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தொலைபேசி வாயிலாக சேவை மையத்திற்கு தொடர்பு கொண்ட பொதுமக்களின் புகார்களை மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது ஒருவரிடம் பேசினார் முதல்வர்.
“வணக்கம், நான் ஸ்டாலின் பேசுறேன் எந்த ஊர் நீங்க, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியா? என்ன கம்ப்ளைன்ட் பண்ணிருக்கீங்க? ஓ…. இப்ப பக்கவா ஆயிடுச்சா? எத்தனை நாளா இந்த கம்ப்ளைன்ட் இருக்கு…’ என்று அந்த மன்னார்குடி காரருடன் பேசினார் ஸ்டாலின். இது மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவையின் 10 இலட்சமாவது தொலைபேசி அழைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நெருங்கும் வடகிழக்கு பருவமழை!
மேலும், இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் செயலக அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா