மது விற்பனை கிளப், ஹோட்டல்கள்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kavi

TN Clubs and Hotels are Following Liquor License Conditions?

மதுபான விற்பனை உரிம நிபந்தனைகளை கிளப்புகள், ஹோட்டல்கள் பின்பற்றுகின்றனவா என்பது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேஷ் பாபு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

“தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, மது விற்கும் உரிமம் பெற்ற கிளப்புகள், ஹோட்டல்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பல கிளப்புகள், ஹோட்டல்களில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது.

உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் கிளப்புகளில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது.

கிளப்புகள், ஹோட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மதுபானங்கள் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உரிமம் பெற்றுள்ள இந்த கிளப்புகள், ஹோட்டல்களில் திடீர் ஆய்வு நடத்தி, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில்,

“கிளப்புகள் மற்றும் ஹோட்டல்கள் உரிம நிபந்தனைகளின்படி செயல்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிளப்புகள், ஹோட்டல்களில் உரிம நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து,

இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ராஜ்

தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம்… மறைக்கப் பார்க்கும் தேசிய குழந்தைகள் ஆணையம்!

2024ல் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைவோம்: சசிகலா