திருவண்ணாமலையில் அலமேலு என்ற பெண்ணை கொலை செய்த போலிச் சாமியாரை காவல்துறை இன்று(செப்டம்பர் 20) கைது செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கண்ணமங்கலம் என்ற பேரூராட்சி உள்ளது. இங்குள்ள கொளத்தூர் ஏரிக்கு நேற்று காலை அந்த ஊரைச் சேர்ந்த விவசாயிகள் ஆடுகள் மற்றும் மாடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளனர்.
அப்போது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் அங்கிருந்ததை கண்டவுடன், கண்ணமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த கண்ணமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள், மோப்ப நாய்களை வைத்து அந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் அந்தப் பெண்ணின் சடலத்தை உடல் கூறாய்வு செய்வதற்காக வேலூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிடம் ஒரு கண்ணாடி பை கிடைத்துள்ளது. அந்த கண்ணாடி கடை சுங்குவார்சத்திரத்தில் இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
காவல்துறை அதிகாரிகள் அந்த கண்ணாடி கடையில் விசாரித்த போது, சடலமாக மீட்கப்பட்ட பெண் ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க அலமேலு என்று தெரியவந்துள்ளது.
மேலும், அந்த பெண் கடந்த சில தினங்களாக ஒரு சாமியாருடன் புதுப்பேட்டை கொளத்தூர் பகுதியில் சுற்றிவந்ததை பார்த்ததாக அங்குள்ள மக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான் தட்சன் என்ற போலிச் சாமியாரை கண்ணமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்ததில் “அலமேலு என்ற அந்த பெண், திருவண்ணாமலையில் தனது உயிர் போக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் திருவண்ணாமலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரை கொளத்தூருக்குக் கூட்டிச் சென்று கத்தியால் கழுத்தறுத்து அவரை கொன்றேன்” என்று காவல்துறையினரிடம் தட்சன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’320 ரூபாய்க்கு ஒரு கிலோ நெய்’: திருப்பதி தேவஸ்தான அதிகாரி எழுப்பிய புது சர்ச்சை!
அடுத்த இரு தினங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம்!
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு… வாய் திறந்த ஜெகன் மோகன் ரெட்டி