திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் காலையில் பரணி தீபமும் மாலையில் மகா தீபமும் நேற்று (டிசம்பர் 13) கோலாகலமாக ஏற்றப்பட்டது. அப்போது, அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று விண்ணுயர முழங்கி வணங்கினர்.
தீப நிகழ்ச்சியில் எந்தவித அசாம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள்!
திருவண்ணாமலை தீபத்திற்கு கடந்த ஆண்டு விஐபி-களுக்கு கட்டண முறையில் அனுமதி சீட்டுக்கள் வழங்கப்பட்டது. ஆனால், சிலர் போலி அனுமதி சீட்டுகள் அச்சடித்து வழங்கியதால், இரு மடங்கு கூட்டம் ஏற்பட்டு நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு போலி அனுமதி சீட்டுக்களை கட்டுப்படுத்த காவல்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து RFID பொருத்தப்பட்ட பாஸ் வழங்கப்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தி நெரிசல் இல்லாமல், தீப நிகழ்ச்சிகளை பார்த்தனர்.
அதேபோல, சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தவதை தவிர்க்க இந்த ஆண்டு இரண்டு மடங்கு கார் பார்க்கிங் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தி அதற்கான தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட்டு டிராபிக் இல்லாமல் பக்தர்கள் விரைவாக சென்றனர். திருவண்ணாமலை நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகள் மற்றும் வெளிவட்ட சாலைகளில் காவல்துறையின் வேண்டுகோளின்படி, நெடுஞ்சாலைத்துறையால் சென்டர் மீடியேட்டர் பொருத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.
திருவண்ணாமலை நகரத்துக்கு வரக்கூடிய ஒன்பது சாலைகளிலும் அரை மணி நேரம் கூட டிராபிக் இல்லாமல் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
போக்குவரத்து பணியிலிருந்த காவலர்கள் சிறப்பு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதால், இந்த ஆண்டு திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி இடையூறுகள் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிரமம் இல்லாமல் தங்கள் ஊர்களுக்கு வந்து சென்றனர்.
திருவண்ணாமலை நகர மாட வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் பறக்கும் படைகளை அமைத்து, சாலையோரங்களில் புதிதாக கடைகள் அமைக்காமல் தடுக்கப்பட்டது.
சாலையோரங்களில் பிச்சை எடுத்து வந்த போலி சாமியார்கள் அகற்றப்பட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்த திருநங்கைகள், பக்தர்களை வழிமறித்து ஆசிர்வாதம் என்ற பெயரில் பணம் கேட்டு தொல்லை செய்வதையும் அறவே தடுத்து நிறுத்தப்பட்டது.
கிரிவலப்பாதையில் உள்ள மலையில் டிசம்பர் 1-ஆம் தேதி மலை சரிவு ஏற்பட்டதால், அரசு உத்தரவை அமல்படுத்தும் வகையில் மலையிலும் காவலர்களை டூட்டிகளுக்கு அமைத்து பொதுமக்கள் யாரும் மலையில் ஏறாத அளவுக்கு தடுத்து நிறுத்தப்பட்டது.
குறிப்பாக, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முறையான குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதால், செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் நடக்காத அளவுக்கு தடுக்கப்பட்டது.
ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்தால் குடும்பங்களின் விவரங்கள் குழந்தைகளின் மணிக்கட்டு பட்டைகளின் கட்டப்பட்டது. இதனால் பெற்றோர்களால் தவறவிடப்பட்ட குழந்தைகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறையும், போக்குவரத்துக் கழகமும் இணைந்து அண்டை மாநில போக்குவரத்து கழகங்களுடன் ஒருங்கிணைந்து தகவல்களை பரிமாறிக்கொண்டதால், பேருந்துகள் உடனுக்குடன் வருவதும் செல்வதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பயணிகளின் சிரமம் குறைக்கப்பட்டது.
இதைப் போன்று 13 விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், திருவண்ணாமலை தீபத்தை வெற்றி பெற வைத்துள்ளனர் காவல்துறையினர். காவல்துறையின் இந்த பணி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியது காங்கிரஸ் குடும்பம்”… நாடாளுமன்றத்தில் மோடி கடும் தாக்கு!