திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத்தைக் காண, 150 விவிஐபிகளுக்கு கோவிலின் உள்ளே தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (டிசம்பர் 13) அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
காலை 6.15 மணிக்கு பரணி தீபம் நிகழ்ச்சி நிறைவடைந்தது. பரணி தீப தரிசனத்திற்கு மொத்தம் 5 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பரணி தீபம் முடிந்தபிறகு, காலை 6 மணிக்கு பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.

ஆனால், இந்த ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அதிகாலை 5 மணிக்கு பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதேநேரத்தில் கோவில் வளாகத்தில் அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
இன்று மாலை மகா தீபத்தைக் காண, அண்ணாமலையார் கோவிலுக்குள் மொத்தம் 25,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கோவில் ஊழியர்கள், பாதுகாப்பு போலீசார், அறநிலையத்துறை ஊழியர்கள் என 12,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவில் கார்த்திகை மண்டபத்தில் பஞ்சமூர்த்தி சன்னதிக்கு அருகில் விவிஐபி-கள் அமருவதற்கு 150 இருக்கைகள் போடப்பட்டு தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோவில் பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்