திருவண்ணாமலை அருண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொடியேற்றத்துடன் இன்று (நவம்பர் 27 ) தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் 63 உயர தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளியவுடன் 6 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷமிட்டனர். இந்த திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வை காண திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதன்பிறகு தினமும் காலை, இரவு வேளைகளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். டிசம்பர் 3 ஆம் தேதி பஞ்ச ரதங்களில் தேரோட்டமும்,
6 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும் , மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 500 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உடல் எடையை குறைத்து..கவர்ச்சியை அள்ளிவீசும் அனுபமா பரமேஸ்வரன்