திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இன்று (டிசம்பர் 4) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள 63 அடி கொடி மரத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீப கொடி ஏற்றப்பட்டது.
காலை மற்றும் இரவு வேளையில், வள்ளி – தெய்வானையுடன் முருகர், விநாயகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்தி மாட வீதி உலா நடைபெறுகிறது.
நாளை (டிசம்பர் 5) இரண்டாம் நாள் திருவிழாவில் இருந்து ஒன்பதாம் திருவிழா வரை காலை விநாயகர், சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்தி மாட வீதி உலாவும் நடைபெறும்.
பத்தாம் திருவிழாவான வருகிற டிசம்பர் 13-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியானது நடைபெற உள்ளது. அன்றைய தினம், அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பாக பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,688 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
இந்தநிலையில், தீபத்திருவிழா குறித்து சென்னையில் நேற்று (டிசம்பர் 3) செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “அதீத கனமழை காரணமாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சேதம் ஏற்பட்டிருந்தால் இரண்டு நாட்களில் சரிசெய்யப்படும். 40 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் கூடினாலும், வெற்றிகரமாக திருவிழாவை நடத்தி முடிப்போம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paralympics 2024: 29 பதக்கங்களுடன் இந்தியா வரலாற்று சாதனை – முழு பட்டியல்!
சாதிவாரிக் கணக்கெடுப்பு… தடை போடும் பாஜக – சமூக நீதி மாநாட்டில் ஸ்டாலின் காட்டம்!