திருமலை போன்று மூன்று ஆண்டுகளில் திருவண்ணாமலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் எ. வ. வேலு, சேகர்பாபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தீபத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூட்டத்தில் பேசியபோது, “தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலை நகர வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருவிழா அன்று வியாபாரிகள் கடைகள் முன்பு தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட வேண்டும் இதற்கு வியாபாரிகள் தரப்பிலும் முழு ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கோயில் உள்ளே வி ஐ பி மற்றும் வி வி ஐபிக்கள் எந்தவித இடையூறுகள் இன்றியும் உள்ளே செல்லவும், அமர வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் உபயதாரர்கள் உள்ளே வரும்போது நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதை காவல்துறையினர் முறைப்படுத்த வேண்டும்.

தீபத் திருவிழாவன்று திருவண்ணாமலைக்கு சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தர உள்ளதால் மருத்துவக் குழுக்கள் போதுமானதாக இருக்காது.
எனவே 100 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், போலீஸார் தங்களுக்கு வேண்டிய நபர்களை கோவிலுக்குள் அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். அனுமதி அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
தேவை இல்லாமல் கோவிலுக்குள் அதிகப்படியான காவலர்களை பணியில் அமர்த்த வேண்டாம். ஒவ்வொரு தேருக்கும் ஒரு சிறப்பு அதிகாரி பணியில் அமர்த்தப்பட வேண்டும்.
கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். திருவண்ணாமலையை திருமலை போன்று ஆக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பொதுப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு,
“திருவண்ணாமலையை திருமலை போன்று மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
தீபத்திருவிழா முடிந்ததும் அதற்கான பணிகள் நடைபெறும். திருவண்ணாமலைக்கு பல்வேறு வசதிகள் கொண்டுவர எனது துறை சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
தேர்கள் சரியான முறையில் உள்ளதா என்பதை அதிகாரிகள் முன்கூட்டியே பரிசோதனை செய்திருக்க வேண்டும். பராசக்தி அம்மன் தேரின் மேல் பகுதியில் பழுது உள்ளதாக புகார் வந்துள்ளது. அதை மீண்டும் சரி செய்ய வேண்டும்.
தீபத் திருவிழாவின்போது வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ராஜ்
உங்க கால்ல வந்து விழனுமா?: மோடியை சீண்டிய மம்தா
2030-ம் ஆண்டு… 50 சதவீத எரிசக்தி உற்பத்தி: ஜி20 மாநாட்டில் பிரதமர் உரை!