திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் செல்போன் சிக்னலை வைத்து கேஜிஎப்பை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்து தீ வைத்து தப்பிச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க ஆந்திரா ,கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் போன்று பலமுறை இந்தியாவில் அரங்கேறியுள்ளதால் அதில் தொடர்புடைய கொள்ளையர்கள், இந்த கொள்ளை சம்பவத்தையும் நிகழ்த்தியுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அங்கிருக்கும் செல்போன் டவரில் எத்தனை செல்போன் அழைப்புகள் வந்துள்ளது, எத்தனை செல்போன் அழைப்புகள் சென்றுள்ளது என்பது குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
இதற்காக சென்னை சைபர் கிரைம் போலீசாரின் உதவியை திருவண்ணாமலை தனிப்படை போலீசார் நாடியுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜி வால் கட்டுப்பாட்டில் செயல்படும் புதிய சைபர் கிரைம் ஆய்வகம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இதில் 30-க்கும் மேற்பட்ட புதிய உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்காக முயற்சி நடந்து வருகிறது.
அந்த அடிப்படையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் அழைப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து

கொள்ளையர்களைப் பற்றிய பல்வேறு புதிய தகவல்களை துல்லியமாக எடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க சென்னை சைபர் கிரைம் பிரிவு உதவி வருகிறது. 15க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் தன்மை குறைவாக இருந்தாலும், அந்த காட்சிகளை தெளிவாக மாற்றி பல்வேறு கொள்ளையர்களின் தெளிவான புகைப்படங்களை மாற்றும் வகையிலான மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு தகவல்களை திரட்டி உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வைத்து வாகனத்தின் நம்பர் பிளேட் மட்டுமல்லாது எவ்வளவு வேகத்தில் செல்கிறது உள்ளிட்ட விவரங்களையும் கணித்து, அதன் மூலம் கொள்ளையர்கள் எவ்வளவு கிலோமீட்டர் சென்றிருக்கலாம் என்ற விவரங்களையும் போலீசார் திரட்டி வருகின்றனர்
ஏடிஎம் கொள்ளையை பொறுத்தவரையில் எத்தனை நபர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு ஒருபுறம் தேடுதல் வேட்டை நடைபெற்றாலும்,
டவர் டம்ப் அனாலிசிஸ் என்ற முறைப்படி அந்தப் பகுதியில் உள்ள செல்போன் டவரில் இருந்து கொள்ளை சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் எத்தனை அழைப்புகள் சென்றிருக்கின்றன என்பதை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம் செல்போன் அழைப்புகள் துல்லியமாக எந்த இடத்திற்கு சென்றிருக்கும் என்பதை அலாகாரிதம் மூலமாக திட்டமிட்டு கொள்ளையர்களை போலீசார் நெருங்கியுள்ளனர்.

இதன் மூலம் கொள்ளையர்கள் யாரேனும் அவர்கள் உறவினர்களுக்கோ வெளியில் உள்ள கூட்டாளிகளுக்கோ தொடர்பு கொண்டிருந்தால் அதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களை பிடித்து விசாரணை செய்து கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருப்பதியில் இரண்டு வாகனங்களை திருடி அதை கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தியது வெளியான நிலையில், தற்போது செல்போன் அழைப்புகள் மூலமாக போலீசார் தேடி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் கோலார் தங்க வயல் பகுதியைச் சேர்ந்த கழிவுநீர் தொட்டிக்கு சிலாப் செய்யும் ஆறு தொழிலாளர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
கொள்ளையர்களின் செல்போன் சிக்னலை வைத்து அந்த பகுதிக்கு சென்ற பொழுது சந்தேகிக்கும் வகையில் ஆறு பேர் அந்த பகுதியில் இருந்ததால் கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற அடிப்படையில் பிடித்து விசாரணை செய்துள்ளனர்
இவ்வாறாக சிசிடிவி, செல்போன் அழைப்புகள், கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் மற்றும் இதே போன்ற குற்றங்களை செய்த குற்றவாளிகள் பட்டியல் எடுத்து விசாரணை, என பல்வேறு கோணத்திலும் ஏழு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கலை.ரா
கிரிக்கெட் அணிக்கு வழிகாட்டியாகும் சானியா மிர்சா
ஈரோடு கிழக்குத் தேர்தல்: பிரச்சாரத்தில் தேமுதிக வாக்குவாதம்!