திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (டிசம்பர் 13) அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ஆம் திருநாளான இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. சன்னதியில் இருந்து பரணி தீபம் கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப எல்லைக்கு காட்டப்பட்டது.
பின்னர், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் ஐந்து விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள், “அண்ணாமலையாருக்கு அரோகரா… உன்னாமலை அம்மனுக்கு அரோகரா” என்று பக்தி முழக்கமிட்டு வணங்கினர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.
இன்று மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

கோவிலை சுற்றியுள்ள 40 கி.மீ வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும். மகா தீபமானது தொடர்ந்து 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.
இன்று அதிகாலை திருவண்ணாமலையில் லேசான மழை பெய்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசிக்க திரண்டு வந்தனர்.
பக்தர்கள் வசதிக்காக 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதேபோல சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பக்தர்கள் மலை ஏற அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
திமுக எம்.பி.க்கள் கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு செல்ல உத்தரவு!
திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து… லிப்ட்டுக்குள் போராடிய உயிர்கள் : என்ன நடந்தது?