திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக, என்.ஐ.ஏ அதிகாரிகள் ரயில்வே ஊழியர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பியதற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி மைசூரு – தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மைசூரில் இருந்து பிகார் புறப்பட்டது. இந்த, ரயிலானது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கவரப்பேட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது, இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தது.
விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், என்.ஐ.ஏ மற்றும் க்யூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
க்யூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ரயில் விபத்தில் சதிவேலை எதுவும் இல்லை என்று தெரியவந்திருப்பதாக கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள் பத்து பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக ரயில்வே ஊழியர் சங்கத்தின் நிர்வாகி ஜானகிராமன் நம்மிடம் பேசியபோது,
“தமிழக காவல்துறையின் மிக முக்கிய பிரிவான க்யூ பிரிவு போலீசார் கவரப்பேட்டையில் நடந்தது ரயில் விபத்து தான், சதிவேலை அல்ல என்று உறுதி செய்தனர்.
இதேபோல, ஒரிசா மாநிலம் பாலசோரில் ரயில் விபத்து நடந்தபோது அது சிக்னல் கோளாறு காரணமாக தான் நடந்தது என்று இந்திய ரயில்வேயின் Principal Chief Signal and Telecom Engineer தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் சிக்னல் சாஃப்டுவேர் பிரச்சனைகள் இருக்கிறது. அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
திருவள்ளூரில் சிக்னல் கோளாறு காரணமாக தான் விபத்து நடந்திருக்கிறது. இதில் எந்தவிதமான சதிவேலையும் இல்லை.
ஆனால், இந்திய ரயில்வே துறைக்கு முதுகெலும்பாக இருக்கக்கூடிய ஊழியர்களை சந்தேகப்பட்டு என்.ஐ.ஏ விசாரணைக்கு அழைப்பதை கடுமையாக கண்டிக்கிறோம். இதை ஒட்டி கண்டன போஸ்டர்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்த ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
35 ஆண்டுகால பிரச்சாரம் முதல் வயநாடு வேட்பாளர் வரை : யார் இந்த பிரியங்கா காந்தி?
தமிழக மீனவர்கள் 128 பேர் கைது… ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்!